Wednesday, November 16, 2011

[vallalargroups:4393] உடலின் மொழி (Must Read Every Human Being)


சமீபத்தில் நான் வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் அ.உமர்பாரூக் எழுதிய "உடலின் மொழி".கவர்ந்த புத்தகம் என்று சொல்வதை விட முழுமையாக என்னை ஆக்கிரமித்த அல்லது அன்றாடம் அதிலிருந்து ஒரு வரியையேனும் நினைத்தே ஆகும்படிக்கு பாதித்த புத்தகம் என்று சொல்வதுதான் சரி.

இலக்கியத்தில் ஆண் மொழி,பெண்மொழி,தலித் உரையாடல் எல்லாம் நாம் அறிவோம். உடல் மொழி பற்றியும் உடல் அரசியல் பற்றியும் கூட இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.இவர் சொல்ல வருவது இதுவெல்லாம் அல்ல.ஒவ்வொரு மனுஷி யுடைய-மனிதனுடைய -உடலும் அவளோடு-அவனோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது.தெவைப்படும் நேரத்தில் அழுத்தமாகவும் ஆவேசமாகவும் கூடப் பேசுகிறது. ஆனால் நம் தேவைகளுக்காக கணிணியின் மொழியை பறவைகளின் மொழியை மிருகங்களின் மொழியைக்கூடப்போராடிக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் நாம் நம் ஆரோக்கியம் குறித்து நம்மிடம் பேசும் உடலின் மொழியை அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தூசியை உள்ளே அனுப்ப மறுக்கும் உடலின் எதிர்ப்புக் குரலே தும்மல்.திரிந்த பாலை வாந்தியாகவும் பேதியாவும் வெளியேற்றுவது குழந்தையின் உடலின் மொழி என்று துவங்கும் இப்புத்தகம், விஞ்ஞானம் நமக்கு இதுகாறும் கற்றுத்தந்துள்ள பல பாடங்களைத் தலைகீழாகப் போட்டு உடைக்கிறது.

மிகவும் அடிப்படையாக நாம் சாப்பிடும் முறை பற்றிய மிகப்பெரிய புரிதலை இந்நூல் நமக்கு வழங்குகிறது.எல்லா உடல் உபாதைகளுக்கும் நோய்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நமது முறையற்ற உணவுப்பழக்கமே-உணவு முறையே என்று ஆணித்தரமாக நம் மனதில் நிறுவுகிறது.அதை ஆசிரியர் சொல்லியுள்ள விதம் –அவர் அதைப் பேசப் பயன்படுத்தும் மொழி மிகச்சரியாக சொல்ல வரும் உள்ளடக்கத்துக்குப் பொருந்துகிறது.

நொறுங்கத்தின்னா நூறு வயசு என்கிறது நம் பழமொழி.அதற்கு உமர் பாரூக் அளிக்கும் விளக்கம் அறிவியல்பூர்வமானதாக -நம்மை ஒப்புக்கொள்ள வைப்பதாக -இருக்கிறது.வீட்டுக்கு விருந்தினர் வந்தால் விடுவிடுவென நாம் அப்படியே காப்பி சாப்பிட அழைத்துச் சென்றால் உள்ளே காப்பி தயாராக இருக்குமா? முன்னறையில் உட்கார வைத்து நாலு வார்த்தை பேசி யாரு வந்திருக்காகன்னு பாரு என்று உள்ளே சத்தம் கொடுத்து துணைவியாரை வரவழைத்து –அவர் வந்து வாங்கன்னு கேட்ட படியே எத்தனை பேர் என்று ஒரு நோட்டம் பார்த்து –இதெல்லாம் முடிந்த பிறகுதானே காப்பி பலகாரம் எல்லாம். அதுபோல வாயில் போட்டதும் மென்றும் மெல்லாமலும் அரைகுறையாக அரைத்தும் அரைக்காமலும் நாம் வயிற்றுக்குள் தள்ளினால் தயாராகாத சமையலறை எதிர்பாரா விருந்தாளியைச் சமாளிப்பதுபோல நன்றாக உபசரிக்க முடியாது போகும்.விருந்தினர் மனவருத்தமடைய நேரிடும்

.பாரூக் சொல்கிறார் " மெல்லுதல் என்பது சாதாரண விசயமல்ல.வாயில் நீங்கள் மென்ரு சுவைக்கும் அந்த உணவின் தன்மை இரைப்பைக்கு அறிவிக்கப்படுகிறது.மிக எளிதான மென்மையான உணவை நீங்கள் மென்று கொண்டிருக்கும்போதே இரைப்பையில் அந்த எளிதான உணவைச் செரிக்கத்தேவையான அமிலம் தயாராகிறது.நீங்கள் கடினமான உணவை மென்று கொண்டிருக்கும்போது கடின உணவைச் செரிக்கும் தன்மையுடன் இரைப்பை தயாராகிறது.முன்னே பின்னே ஒரு தகவலும் இல்லாமல் திடீரென்று கதவைத்தள்ளிக்கொண்டு நுழையும் விருந்தாளியாக இரைப்பையில் விழும் உணவைச் செரிக்கமாட்டாத இரைப்பை அதை என்ன செய்யும்?

தவிர, நொறுங்கத்தின்பது என்பது செரிமானத்தை எளிதாக்கும்.சிறிய சிறிய கவளங்களாக உணவை வாயிலிடும்போதே நன்றாக மென்று அரைத்துக்கூழாக்கி விழுங்க வேண்டும்.ஏனென்றால் இரைப்பையில் உணவைக் கூழாக்கவோ,நொறுக்கவோ எந்த ஏற்பாடும் இல்லை.இரைப்பைக்குப் பற்களா இருக்கின்றன என்று உமர் பாரூக் கேட்கும் போது நாம இத்தனை காலம் ஒழுங்கா திங்கக்கூடத் தெரியாமத்தான் வளர்ந்து நிக்கிறமா என்கிற வெட்க உணர்வு எனக்கு ஏற்பட்டது.எப்படி தின்பது?எப்படி தண்ணீர் குடிப்பது ? நோய் என்றால் என்ன? உடம்பு தவறு செய்யுமா? என்று பலபல கேள்விகளை எழுப்பி நம்மை முற்றிலும் புதிய ஓர் உலகத்துக்குள் அழைத்துச்செல்கிறார்.

இதெல்லாம் ஒரு மாதிரிக்காக எடுத்துச்சொன்னேன்.புத்தகத்தை முழுமையாக வாசித்தாலே அதன் அருமையை நாம் உணர முடியும்.நான் பொதுவாக மனதுக்குப் பிடித்து விட்டால் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஆகா ஓகோ என்று புகழ்ந்து எழுதி விடுகிற ஆள்தான்.ஆனாலும் இப்புத்தகம் பற்றிக் கூடுதலாக நான் ஒரு வார்த்தையும் எழுதிவிடவில்லை என்பதை வாசிப்பவர்கள் அறியலாம்.இந்த சிறு அறிமுகத்தை வாசிப்பவர்கள் இதை நூறு பிரதிகள் எடுத்து நூறு பேருக்குக் கொடுத்தால் உங்கள் குடும்பம் செழித்தோங்கும் .தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் இப்புத்தகத்தை 600 பிரதிகள் வாங்கி தம் தோழர்களுக்கெல்லாம் கொடுத்துள்ளார்கள்.ஆறு மடங்கு நன்மை அவர்களுக்கு உண்டாகட்டும்.முதல் பதிப்பு வெளியாகி எட்டு மாதங்களுக்குள் ஐந்தாவது பதிப்புக் காணும் இந்நூல் தமிழ்ப்புத்தக உலகிலும் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்நூலில் உணர்வுகளும் உணவும் உடலும் பற்றி எழுதவில்லை.அது இந்நூலின் இரண்டாம் பாகத்தில் வரும் என ஆசிரியர் கூறினார்.அதையும் சேர்த்து வாசிப்பது இன்னும் கூடுதல் பலன் தரும் என்பது நிச்சயம்.



(ஐந்தாம் பதிப்புக்கான அணிந்துரையாக இவ்வரிகள் எழுதப்பட்டன)

உடலின் மொழி- ஆசிரியர் Healer .அ.உமர்பாரூக்

வெளியீடு –பாரதி புத்தகாலயம்,421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,சென்னை-600018

விலை-ரூ.40.பக்கம்.80அ

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)