தினந்தோறும் ஒரு தீபாவளி நடக்கிறது. அதற்கு சூரிய உதயம் என்று பெயர். மாதம் தோறும் ஒரு தீபாவளி நடக்கிறது. அதை பௌர்ணமி என்கிறோம். வருடத்திற்கு ஒரு தீபாவளி நடக்கிறது. அதை மட்டுமே தீபாவளி என்று நாம் நினைக்கிறோம் ஆவளி என்றால் வரிசை என்று பொருள். ஸ்வரங்களை வரிசை படுத்தினால் ஸ்வராவ்ளி. ஆண்டவனை அர்ச்சிக்கும்போது நாமங்களை வரிசைபடுத்தினால் நாமாவளி. அதுபோல் தீபங்களை வரிசைப்படுத்தினால் தீபாவளி. விளக்கு - தீபம் - பெண்களோடு தொடர்புடைய ஒரு விஷயம். அழகான பெண்பிள்ளைகளை " குத்துவிளக்கு மாதிரி" என்று வர்ணிப்பது வழக்கம். வீட்டுக்கு வரும் மருமகளை " வீட்டில் விளக்கேற்றி வைக்க ஒரு பெண் வந்தாள்" என்பது வழக்கம். அதனால்தான் இருகரத்தாலும் திருவிளக்கேந்திய நிலையில் மருமகள், கணவன் வீட்டில் காலடி வைக்கிறாள். விளக்கு என்ற சொல்லுக்கு என்ன பொருள்? விளக்குவது "விளக்கு"! இருட்டில் தெரிய முடியாத குருட்டுத்தனம் நம்மிடம் இருக்கிறது! ஒரு கை விளக்கு இருந்தால்.... மேடும் பள்ளமும் விளங்குகிறது. எனவே விளக்குவது விளக்கு. ஒரு ஆணுக்கு விளங்காத பல விஷயங்களை விளக்குபவள் பெண். அதனால்தான் அவள் விளக்கோடு வருகிறாள். ஜாதி, மதம் என்ற அறியாமை இருள் கிழிய, "ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி" என்ற மாணிக்க வாசகர் திருவாக்கை - "அருட்பெரும் ஜோதி; தனிப்பெரும் கருணை" என்று தமிழில் இருந்தே தமிழுக்கு மொழிப் பெயர்த்தார் வள்ளலார். பஞ்ச பூதங்களில் நெருப்பு மையமானது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தில் மையத்தில் இருக்கும் - நெருப்பு தான் நிலத்தில் இருக்கும் மனிதனை ஆகாயத்துக்கு இட்டுப் போகும் மகத்துவம் உடையது. கடவுளையும் மனிதனையும் இணைக்கும் மையம் நெருப்பு. அதனால் தான் ரிஷிகள் வேல்விக்கூடங்களில் தீ வளர்த்து தெய்வங்களை அதில் படர விட்டனர். பெண்கள் வீட்டில் விளக்கேற்றி கடவுளை அதில் உட்காரவைத்தனர். மெழுகுவத்தியை ஏற்றி தலைகீழாக பிடியுங்கள். தீபத்தை தலைகீழாகப் பிடித்தாலும் அது மேல்நோக்கியே எரியும். உயர....உயர.... என்று உயரப் பிறந்தவன் மனிதன் என்பதை உணர்த்துவது தீபம். மண்ணுக்கும் - விண்ணுக்கும், மனிதனுக்கும் தேவனுக்கும் தீபமே ஒளிபாலம். இறைச்சியாகிய மனிதனை இறை மனிதனாக்கும் இணைப்பு தீபமாகிய நெருப்பு. உடம்பில் உயிர் இருந்தால் நமது உடற்கூடு 98.4. இந்த நெருப்பு நீங்கிவிட்டால் மனிதன் வெறும் இறைச்சி. எனவே இறைச்சி மனிதனை இறை மனிதனாக்கும் இணைப்பு உயிர் ஒளியே! உயிர் நெருப்பே. ஜீவான்மாக்கள் பலப்பலவாக பிரிந்து நின்றாலும் இவை ஒரே பரமான்மாவில் இருந்தே பிரிந்தன என்கிறது வேதாந்தம். இதை விளக்கவே, ஒரு விளக்கில் இருந்து பலப்பல விளக்குகள் ஏற்றப்படுவதையே உவமையாக சொல்லப்படுவது வழக்கம. இந்த உவமையை, உண்மையை உணர்ந்து கொண்டு தீபாவளிக்கு வரிசை வரிசையாக விளக்கேற்றினால் மனசுக்குள்ளும் மத்தாப்பூ மலரும். பிறவியை உடைக்கும் வெடிகூட வெடிக்கும். மண்ணால் செய்யப்பட்ட மட்பாண்டமே அகல் விளக்கு. அதில் சுடர் குடியேறிவிட்டால் அது வணங்கத்தக்கதாக மாறுகிறது. மங்கள பொருள் என மதிக்க பெறுகிறது. நமது உடம்பும் மட்பாண்டமே. அதில் சுடர்விடும் மங்கள நெருப்பே உயிர். அந்த உயிர் நெருப்பு இறைவனின் அம்சம் என்ற தெளிவு பிறந்தால் - நாம் இறைவனே இந்த தீபாவளி திரு நாளில் மகிழ்ச்சி பொங்கட்டும். உங்கள் பிள்ளைகளின் முகங்களில் ஒளி வெள்ளம் பரவட்டும. |
No comments:
+Grab this
Post a Comment