Monday, April 4, 2011

[vallalargroups:4032] எருமையின் வாக்கு வங்கி

எருமையின் வாக்கு வங்கி

அதிகாலையில் அய்யா என்ற கரகர குரலில் யாரோ என் வீட்டு பின்புறத்திலிருந்து அழைப்பதுபோல இருந்தது. யாராக இருக்கும் என்று வீட்டு தோட்டத்திற்கு சென்றேன். அங்கு ஆச்சரியம் காத்திருந்தது. தோட்டத்தில் கட்டியிருந்த எருமை மாடுதான் அய்யா என அழைத்திருந்தது என்பது எனக்கு அது அடுத்து என்னை நோக்கி பேச துவங்கியபோதுதான புரிந்தது.

எனது ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு அது என்னதான் சொல்கிறது என கேட்கலானேன்.

அது தொடர்ந்தது

அய்யா வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி என்னை கயிற்றில் கட்டி வைக்காதீர்கள் நான் ஓட்டு போட போக வேண்டும் என்ற போது எனக்கு ஆச்சரியம் மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. இப்போதெல்லாம் எருமைக்கெல்லாம் ஓட்டு உரிமை அளித்து விட்டார்களா ? என்று. 

சரி அதை எருமையிடமே கேட்டு விடலாம் என்றால் நாமோ மனிதன் போயும் போயும் ஒரு எருமையிடமா நமது சந்தேகத்தை கேட்பது என்று தன்னுணர்வு தடுத்தது.

இதை புரிந்து கொண்ட எருமை, அய்யா மனிதர்கள் தன்னுணர்வு மிக்கவர்கள் மற்றும் இந்த உலகிலேயே மனிதர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற அபிப்பிராயம் கொண்டவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். இருந்தாலும் உங்களது சந்தேகத்திற்கு விடை கூற நான் விரும்புகிறேன் என்றது.

எனக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் இருப்பினும் பேசாமல் இருந்தேன்.

எருமை தொடர்ந்தது வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அன்று எனது வாக்கினை செலுத்த வேண்டி இருப்பதால் அன்று எனக்கு விடுமுறை வேண்டும் என்றது.

இதற்கு மேலும் எனக்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை. எருமையிடம் கேட்டேவிட்டேன். உங்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டு விட்டதா ? ஆச்சரியமாக இருக்கின்றதே ? உங்களுக்கு எல்லாம் ஓட்டு போடும் உரிமையை எப்போது சட்டமாக்கினார்கள் ? நீங்கள் எப்படி ? யாருக்கு ஓட்டு போடுவீர்கள் ?

எனது அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட எருமை தனது கரகர குரலால் சிரித்துக்கொண்டது.

அது பதில் சொல்லத் தொடங்கியது

உங்களை போன்ற மனிதர்கள் இந்த உலகம் உங்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டு மனிதர்களின் வாழ்வு வளம் பெற வேண்டும் என்று உங்களுக்கு ஒரு தலைமையினை ஏற்படுத்துவதற்காக தேர்தல் முறையை கொண்டு வந்து இருக்கின்றீர்கள். ஆனால் நாங்களும் உங்களை போன்றுதானே இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். 

எங்களுக்கான உரிமைக்கா போராடும்ஒரு தலைமை எங்களுக்கு வேண்டாமா ? உலகம் அனைத்து உயிர்களுக்காகவும்தான் படைக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது மனிதர்கள் மிகுந்த சுயநலமாக தங்கள் இனத்தை காத்துகொள்வதற்காக நிறைய திட்டங்களை வகுக்கின்றீர்கள். என்றாவது எங்களது வளர்ச்சிக்காக நீங்கள் திட்டங்கள் வகுத்ததுண்டா ?

அதிலும் மனிதர்கள் பகுத்துண்டு வாழ வேண்டும் என்கிற கொள்கைக்கு எதிரானவர்களாக இருக்கின்றார்கள். பணம் என்ற ஒன்றை கண்டுபிடித்து அதை மேலும் மேலும் பெருக்குவதிலேயே காலத்தை கழிக்கின்றார்கள். அதனால் ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயலுகின்றார்கள்.

எங்களை பாருங்கள் நாங்கள் எங்களுக்கு என்று வீடு கேட்கிறோமா ?

எங்களுக்கு என்று மகிழுந்து, பேருந்து என போக்குவரத்து சாதனங்களை கேட்கிறோமா ?

மனிதர்களை போன்று ஆடம்பர பொருட்களை விரும்புகிறோமா ?

மனிதர்களை போன்று அவரிடம் உள்ள பொருள் எங்களிடம் இல்லையே என பொறாமை படுகின்றோமா ? அல்லது வருத்தப்படுகின்றோமா ? பிறர் பொருளை அபகரிக்க வேண்டும் என்று சண்டையிடுகிறோமா ?

எங்களது தேவையெல்லாம் அந்தந்த வேளைக்கான உணவு மட்டும்தான் வேறு என்ன உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் ? அந்த உணவை போட்டதற்காக நாங்கள் உங்களுக்கு எங்களது உழைப்பையும், எங்களது பாலையும் தருகிறோமே. அப்படியிருந்தும் எங்களுக்கும் ஒரு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று மனிதர்களாகிய உங்களுக்கு தோன்றியதா ?

ஆகவேதான் நாங்களே எங்களது மிருகங்களுக்கான தலைமையை தேர்ந்தெடுக்க ஒரு தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்து விட்டோம். இந்த எங்களது தேர்தலில் மிருகங்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறியது எருமை.

எனக்கு எருமை சொன்னதில் உள்ள உண்மை சுட்டாலும். சரி இவர்களுக்கு தலைவராக யார் வருவார் எனும் ஆவல் மேலும் அதிகரித்தது. அதை எருமையிடமே கேட்டு விட்டேன்.

சரி யார்தான் உங்களது தலைவராக வருவார்கள் ? எந்த எந்த மிருகங்கள் தலைமை பதவிக்கு போட்டியிடுகின்றன என கேட்டேன்.

எருமை பொறுமையாக பதிலளித்தது. எங்களது மிருங்களை காப்பதாக நரி இனம் உறுதி கூறி உள்ளது. அதில் நான்கு நரிக்கட்சிகள் உள்ளன. அவற்றில் எந்த நரி சரியானது என முடிவு செய்து அந்த நரியினை எங்களது தலைவராக தேர்ந்தெடுப்போம் என்றது.

எனக்கு தலை சுற்றியது. என்ன மிருகங்களுக்கும் தலைவர்களாக நரிகள்தானா ?


ஆக்கியோன் - 
நக்கினம் சிவம்
--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com


--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)