Sunday, May 27, 2018

[vallalargroups:5961] திருவருட்பா - பதைத்தேன்

திருவருட்பா - பதைத்தேன் 


நாளும் பல கொடிய செய்திகள் நம்மை வந்து சேர்கின்றன. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் காதிலும் கண்ணிலும் விழுந்து கொண்டே இருக்கின்றன.

தொலைக் காட்சிகளில் , எங்கே நாம் மறந்து விடுவோமோ என்று காண்பித்த செய்திகளை மீண்டும் மீண்டும் காண்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இதன் விளைவுகள் என்ன என்றால்,

ஒன்று, கொடிய செய்திகளை கேட்டு கேட்டு மனம் மரத்துப் போகும். இது தான் தினம் நடக்கிறதே. வழக்கமான ஒன்று தான் என்று நினைக்கத் தொடங்கி விடுவோம்.

இரண்டாவது, தீய செயல்களில் நம்மை அறியாமலேயே ஒரு சுவை வந்து விடும். நல்லவன் கூட , அட இப்படி செய்யலாமா ? நாமும் செய்து பார்த்தால் என்ன ? என்று ஒரு ஆர்வத்தை தூண்டி விடும்.

தீமைகளை கண்டு உள்ளம் பதை பதைத்தால் தான் அதை செய்யாமல் இருப்போம். செய்பவர்களை விட்டு விலகி நிற்போம். தீயவைகள் சாதாரணமானவை , எப்போதும் நடக்கும் ஒன்று தான் நினைத்து விட்டால், தீமைகளை தட்டிக் கேட்கும் மனம் போய்விடும். நாமும் செய்யலாம் என்றும் நினைக்கத் தொடங்கி விடுவோம்.

வள்ளலார் கடற்கரையில் நடந்து செல்கிறார். அங்கு மீன் பிடிக்கும் வலை, தூண்டில் எல்லாம் வெயிலில் காய வைத்து இருக்கிறார்கள். நாமாக இருந்தால் என்ன நினைப்போம் ? ஏதோ வலை, தூண்டில் எல்லாம் கிடக்கிறது என்று நினைப்போம்.

ஆனால், வள்ளலார் அவற்றைக் கண்டு மனம் பதைக்கிறார். ஐயோ, இந்த கொலை கருவிகளைக் கொண்டு எவ்வளவு மீன்களைப் பிடிப்பார்கள். அவற்றை கொல்வார்கள் . அப்போது அந்த மீன்கள் எவ்வளவு துடிக்கும். தூண்டிலில் சிக்கிய மீன்  எப்படி தவிக்கும் , தொண்டையில் முள் குத்தினால் எவ்வளவு வலிக்கும் என்று நினைத்து பதறுகிறார்.

கொடியவர்கள் மற்றவர்களை கொல்லத் தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். மற்ற உயிர்கள் பதைக்கும் போதெல்லாம் நானும் பயந்தேன்.  வலையையும் , தூண்டிலையும் கண்டபோதெல்லாம் உள்ளம் நடுங்கினேன்  என்கிறார் வள்ளலார்

பாடல்

துண்ணெனக் கொடியோர் பிற வுயிர்  கொல்லத் தொடங்கிய பேதெல்லாம் பயந்தேன் 
கண்ணினால் ஐயோ பிற வுயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போதெல்லாம் 
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திரு உள்ளம் அறியும் 


பொருள்

துண்ணெனக் = துணுக்குறும் படி

கொடியோர் = கொடியவர்கள்

பிற வுயிர் = பிற உயிர்களை

கொல்லத் தொடங்கிய = கொல்லத் தொடங்கிய

போதெல்லாம் பயந்தேன் = போதெல்லாம் பயம் கொண்டேன்

கண்ணினால் = கண்ணால்

ஐயோ = ஐயோ

பிற வுயிர் = மற்ற உயிர்கள்

பதைக்கக் கண்ட காலத்திலும் = பதைக்கின்ற காலத்திலும்

பதைத்தேன் = பதைப்பு அடைந்தேன்

மண்ணினில் = பூமியில்

வலையும் = (மீன் பிடிக்கும்) வலையும்

தூண்டிலும் = தூண்டிலும்

கண்ணி வகைகளும் = பறைவைகளைப் பிடிக்கும் கண்ணி வகைகளை

கண்ட போதெல்லாம் = பார்கின்றபோதெல்லாம்

எண்ணி = அவற்றை எண்ணி

என் உள்ளம் = எனது மனம்

நடுங்கிய நடுக்கம் = நடுங்கிய நடுக்கம்

எந்தை = என் தந்தையாகிய

நின் = உன்

திரு உள்ளம் = திரு உள்ளம்

அறியும் = அறியும்

துப்பாக்கியை கண்டால் மனம் பதற வேண்டும்.  கறி வெட்டும் கத்தியைக் கண்டால் மனம்  பதைக்க வேண்டும்.

உயிர்கள் துன்பப் படும் போது மட்டும் அல்ல, இனி துன்பப் படுமே என்று நினைத்து வருந்துகிறார் வள்ளுவர்.

அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

மற்ற உயிர்களை நம் உயிர் போல் நினைக்க வேண்டும்.

அருளின், கருணையின் உச்சம் இது.

அந்த உயர்ந்த அன்பு நம் மனத்திலும் சுரக்கட்டும்.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)