Friday, April 21, 2017

[vallalargroups:5640] சித்திரை 8 இன்று அகவல் எழுதிய நாள்

சித்திரை 8 இன்று அகவல் எழுதிய நாள்
====================================
அகவலின் அசல் பிரதியை அதாவது வள்ளற்பெருமான் தன் தெய்வத்திருக்கையால் எழுதிய அகவலை நேரில் கண்டு பதிப்பித்தவர் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை ஒருவரே ஆவார்.

அகவல், ஆறாம் திருமுறையில் வருகிறது. இந்த ஆறாம்திருமுறை முதன்முதலாகப் பதிப்பிக்கபட்ட ஆண்டு 1885 ஆகும். பதிப்பித்தவர் வேலூர் பத்மநாப முதலியார் ஆவார். இவருக்குப் பிறகு 1892 ஆம் ஆண்டு பொன்னேரி சுந்தரம் பிள்ளை ஆறு திருமுறைகளையும் தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிட்டார். 1924 இல் ச.மு. கந்தசாமிப்பிள்ளையும் ஆறு திருமுறைகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். இதன்பிறகு 1932 இல் சென்னை சன்மார்கச் சங்கத்தின் சார்பிலும் ஆறுதிருமுறைப் பதிப்பு வெளியானது. மேற்கண்ட எந்த பதிப்பிலும் அகவல் எழுதிய நாள் குறிப்பிடப்படவில்லை.

1931 இல் தனது திருவருட்பாப் பணியை தொடங்கிய ஆ.பாலகிருஷ்ண பிள்ளை  உரைநடைப் பகுதி, திருவருட்பா என 12 நூல்களாக தொகுத்து வெளியிட்டார். இதில் 12வது புத்தகமான "ஆறாம் திருமுறை முடிந்த பகுதி அல்லது சித்தி வளாகப் பகுதி" என்ற தலைப்பிலான நூலில் அகவலைப் பதிப்பித்துள்ளார். வள்ளற்பெருமான் கைப்பட எழுதியது மட்டுமல்லாமல் வள்ளற்பெருமானுடன் வாழ்ந்த  அன்பர்களின் அகவல்  கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கை ஐந்தாகும்.

வள்ளற்பெருமானின் கையெழுத்துப் பிரதியில் இருப்பதற்கு மாற்றாக முதல் அச்சில் (1885) உள்ள பாடவேறுபாடு அன்பர்களின் படிகளிலிலும் ச.மு.க பதிப்பிலும் உள்ள பாடவேறுபாடுகளையும் மிகத் தெளிவாக ஆ.பாலகிருஷ்ண பிள்ளை ஆங்காங்கே தனது பதிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். 

வள்ளலார், அகவலின் முடிவில் ஆங்கீரச வருடம், சித்திரை 'அ' என்று எழுதியுள்ளார். 'அ' என்றால் தமிழ் எழுத்துப்படி 8 என்ற எண்ணைக்
 குறிக்கும். அதாவது சித்திரை மாதம் 8 ஆம் தேதியில் வள்ளலார் அகவலை எழுதியிருப்பது இதன் மூலம் அறியமுடிகிறது.

வள்ளலார் 1823 ஆம் ஆண்டு (சுபாணு ஆண்டில்) பிறந்தார். 1874  ஆம் ஆண்டு (சிறீமுக ஆண்டில்)  சித்தி பெற்றார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது 1823-1874 காலகட்டங்களில் வந்த ஆங்கீரச வருடம் சித்திரை 8 ஆம் தேதியின் அப்போதைய ஆங்கில தேதிதான் 18-04-1872 என்பதாகும். அந்த நாளில் வந்த கிழமை வியாழன் ஆகும். இந்த வரலாற்றுக் குறிப்பை பஞ்சாங்கத்தின் உதவியுடன் திருவருட்பா செம்பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ண பிள்ளை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதை அவர் பதிப்பித்த ஆண்டு 1958 ஆம் ஆண்டாகும்.

இதன் பிறகுதான் அகவல் எழுதிய நாள் சன்மார்க்க உலகத்திற்கு தெரியவந்தது. இதையே இன்றுவரையிலும் சன்மார்க்கத்தினரும் சன்மார்க ஆய்வாளர்களும் பின்பற்றி வருகின்றனர். வியாழக்கிழமை தோரும் அகவல் படிக்கும் பலரிடமும் நான் கேட்கும் ஒரு கேள்வி இன்று மட்டும் ஏன் அகவல் படிக்கிறீர்கள்? அதற்கு அவர்கள் சொல்லும் பதில் இன்று 'குருவாரம்' என்பதாகும். தமிழில் வியாழக்கிழமை என்பதே சமஸ்கிருத மொழியில் 'குருவாரம்' என்பதாகும். 'குரு' என்றால் வியாழன். 'வாரம்' என்றால் கிழமை. வியாழக்கிழமையில் அகவல் எழுதி முடிக்கப்பட்டதால் அந்த நாளை போற்றும் வகையில் சன்மார்க்கிகளால் வழிவழியாக பின்பற்றப்பட்டு இன்றுவரை வியாழன்தோரும் அகவலுக்கு முக்கியத்துவம் தருகின்றனர் என்பதே உண்மை. (நாள்தோரும் ஓதுபவர்களும் உள்ளனர்) 

அகவல் தொடர்பாக மிகையான செய்தியும் ஒருசிலரால் பக்திமேலிட நம்பப்பட்டு வருகிறது. ஒரே இரவில் வள்ளலார் அகவலை எழுதினார் என்பதே அது. ஒரே இரவிலும் எழுதியிருக்கலாம் அல்லது எழுத பல நாட்களும் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரே இரவில் வள்ளலார் அகவலை எழுதினார் என்பதற்கான எந்த வரலாற்றுக் குறிப்பும் இதுவரை இல்லை என்பதே உண்மை.
அன்புடன்
கா.தமிழ்வேங்கை
(திருவருட்பா செம்பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ண பிள்ளையின் கொள்ளுப் பேரன்)
பேச: 94861 76734.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)