Tuesday, January 29, 2013

[vallalargroups:4704] Vallalar - உண்டுபண்ணு மென்பது உண்மை.




Photo


Jeevakarunyam in English Jeevakarunyam in Tamil

 

1.    சூலை குன்மம் குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களுக்குப் பசி யாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து, விசேஷ சௌக்கியத்தை உண்டு பண்ணுமென்பது உண்மை.

2.    பல நாள் சந்ததி யில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.

3.    அற்பவயதென்று குறிப்பினால் அறிந்துகொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த சீவகாருணிய அனுசரிப்பு தீர்க்காயுளை உண்டுபண்ணுமென்பது உண்மை.

4.    கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

5.    பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக் கொண்ட சீவகாருணிய முள்ள சமுசாரிகளுக்குக் கோடையில் வெயிலும் வருத்தாது, மண்ணும் சூடு       செய்யாது - பெருமழை, பெருங்காற்று, பெரும்பனி, பேரிடி, பெருநெருப்பு முதலிய உற்பாதங்களும் துன்பம் செய்விக்கமாட்டா - விடூசிகை* (வைசூரி, அம்மை)விஷக்காற்று விஷசுரம் முதலிய அசாத்திய பிணிகளுமுண்டாகா -

6.    அந்தச் சீவகாருணியமுள்ள சமுசாரிகள் ஆற்று வெள்ளத்தாலும் கள்ளர்களாலும் விரோதிகளாலும் கலக்கப்படார்கள் - அரசர்களாலும் தெய்வங்களாலும் அவமதிக்கப்படார்கள் - சீவகாருணிய முள்ள சமுசாரிகளது விளைநிலத்தில் பிரயாசை யில்லாமலே விளைவு மேன்மேலும் உண்டாகும் - வியாபரத்தில் தடையில்லாமல் லாபங்களும், உத்தியோகத்திற்      கெடுதியில்லாத மேன்மையும் உண்டாகும் - சுற்றங்களாலும் அடிமைகளாலும் சூழப்படுவார்கள் - துஷ்டமிருகங்களாலும் துஷ்ட ஜந்துக்களாலும் துஷ்டப் பிசாசுகளாலும் துஷ்ட தெய்வங்களாலும் பயஞ்செய்யப்படார்கள் - சீவகாருணியமுள்ள சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் அஜாக்கிரதையினாலும் ஊழ்வகையினாலும் சத்தியமாக வராது.

 

7.           சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ காரியங்களில் பந்தலை அலங்கரித்தும், அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் செய்வித்தும், ஆடல் பாடல் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களையும் அப்பவர்க்கம் சித்திரான்னம் முதலிய       பெருமைப்பாடுகளையும் நடத்தியும், எக்களிப்பில் அழுந்தியிருக்குந் தருணத்தில் பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும் தமது மக்கள் துணைவர் முதலியோர்க்காயினும் ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது. அப்போது அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகிறார்கள். இப்படித் துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும் ஆடல் பாடல் வாத்தியம் வரிசை ஊர்வலம் முதலிய வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரான்னம் முதலிய பெருமைப்பாடுகளும் அந்த ஆபத்தைத் தடைசெய்யக் கண்டதில்லை. அந்தச் சுபகாரியத்தில் உள்ளபடியே பசித்த சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்கத்தையும் கடவுளின்பத்தையும் வெளிப்படச்   செய்திருந்தார்களானால், அந்த விளக்கமும் இன்பமும் அத்தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டுபண்ணுமல்லவா? ஆகலில் விவாக முதலிய விசேஷச் செய்கைகளிலும் தங்கள் தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென் றறியவேண்டும்

8.    பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண்சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம்     செய்யத்தக்க தென்பது கடவுளாணை யென்றறிய வேண்டும்.

 

9.    பசித்தவர்க்குப் பசியை நீக்குகின்ற விஷயத்தில்

·         புருஷனைப் பெண்சாதி தடுத்தாலும்,

·         பெண்சாதியைப் புருஷன் தடுத்தாலும்,

·         பிள்ளைகளைத் தந்தை தடுத்தாலும்,

·         தந்தையைப் பிள்ளைகள் தடுத்தாலும்,

·         சீஷரை ஆசாரியர் தடுத்தாலும்,

·         அடியாரை ஆண்டவன் தடுத்தாலும்,

·         குடிகளை அரசன் தடுத்தாலும்

அந்தத் தடைகளால் சிறிதுந் தடைபடாமல் அவரவர் செய்த நன்மை தீமைகள் அவரவரைச் சேருமல்லது வேரிடத்திற் போகா வென்பதை உண்மையாக நம்பிச் சீவகாருணிய ஒழுக்கத்தை நடத்தவேண்டுமென்றும் அறியவேண்டும்.

 

10. உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும். ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக்       கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.

11. ஆகாரங்கொடுக்க உண்டு பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும் மேலும் நடுவும் பக்கமும் நிறைந்து கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேகமுழுதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள்விளக்கத்தையும் திருப்தியின்பமாகிய கடவுளின் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் தரிசித்து அனுபவிக்கின்றார்க ளாதலால், அந்தப் புண்ணியர்கள்
கடவுளைக் கண்டவர்களென்றும், கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்தரென்றும் அறியவேண்டும். பசி நீங்க உண்டு சந்தோஷ'த்தவர்கள் இந்தப் புண்ணியர்களைத்   தெய்வமாகப் பாவிக்கின்றார்களாதலால், இவர்களே தெய்வமுமென்று உண்மையாக அறியவேண்டும்.

 




- Thiru Arut Prakasa Vallalar ( Jeevakarunya olukkam)

--







Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

--
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallalargroups+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)