அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
துன்பங்கள் நீங்க
அன்புடையீர்!
மனிதன் தன்னுடைய இயற்கையான கருணை குணத்தை தொலைத்து பல யுகங்கள்
கடந்துவிட்டது. கருணை குணத்தை தொலைத்து மிருகங்கள், பட்சிகள் மற்றும் சக
மனிதனை துன்பத்துக்கு உட்படுத்தி தன்னுடைய சுய தேவைகளை பூர்த்தி செய்ய
ஆரம்பித்த மனிதன் நாள்கள் தோறும் பல துன்பத்திற்கு ஆளாகிறான்.
கருணை குணம் எங்கு இல்லையோ அங்கு இறைவன் இருப்பதில்லை. இறைவன் என்பது
இங்கு கருணையே ஆகும். ஆனால் இந்த கருணை- தயவு குணத்தை விடுத்து, மனிதன்
பல வழிகளில் இறைவனை காண விழைகிறான். பூஜை, ஹோமங்கள் மற்றும் புனித
தீர்த்தங்களில் நீராடல் என்று பல பரிகாரங்கள் செய்கிறான்.
புனித தீர்த்தத்தில் நீராடினாலும் துன்பங்கள் தீராது என்பதை
வலியுறுத்தவே வள்ளுவர் " புறந்தூய்மை நீரால் அமையும், அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்" என்கிறார். எனவே மனிதன் தன்னுடைய எண்ணத்தை
மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். எண்ணம் தூய்மை அடைந்து பிற உயிர்களில்
மேல் அன்பு-கருணை- தயவு ஏற்பட்டால் மனிதனிடம் உள்ள அனைத்து சக்கரங்களும்
தானே இயங்கும். ஸ்தூல தேகம் சுத்த தேகமாக மாறும்.
நாள், கோள், கொடுங்கூற்றன் இவைகளால் எவ்வித ஆபத்தும் வராது. வள்ளல்
பெருமானார் இதனை இவ்வாறு பாடுகிறார்:
''காற்றாலே புவியாலே சுகனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்க னாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன்
விரைந்தளித்தான் எனக்கே''- என்கிறார்.
எனவே எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பாவித்து சுத்த சன்மார்க்க நெறியில்
நின்று, அனைத்து உயிர்களுக்கும் தொண்டு செய்து, எல்லாம் வல்ல
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை நினைந்து,
உணர்ந்தால் அவரே நாம் என்பதும் தெரிய வரும். நமது திருச்சிற்றம்பலத்தில்
ஜோதி ரூபமாக இருக்கும் இறைவன் அவரே என்பதும் தெரிய வரும்.
ஆகவே சன்மார்க்கத்தில் சார்ந்து அனைத்து இடர்பாடுகளையும் (மாயையை)
போக்கிக்கொள்ளவே எல்லாம் வல்ல வள்ளல் பெருமானார் அழைக்கிறார்.
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்கு
என் மார்க்கமும் ஒன்றாமே. -திருவருட்பா
ஆகவே
• யாகங்கள், ஹோமங்கள் செய்தால் எவ்வளவு பலன் கிடைக்குமோ, அதை விட கோடி
மடங்கு "உயிர் கொல்லாமை" மூலமும், தயவு வாழ்க்கை மூலமும் கிடைக்கும்
என்பதை உணருங்கள்.
• பிற உயிர்களை கொன்று தின்று வாஷ்து வீட்டில் குடியிருந்தாலும்,
வீட்டின் வண்ணத்தை மாற்றினாலும், புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்தாலும்
துன்பங்கள் தீராது என்பதை உணருங்கள்.
• பிற உயிர்களின் துன்பத்தை சகிக்காதவனும், அவ்வுயிர்களின் துன்பத்தை
போக்குபவனும், இவ்வுலகில் தெய்வ நிலையில் வாழும் "மனிதன்".
• எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்யும் போது ஏழு மாயா திரைகளும் தானே
நீங்கும்- ஏழு சக்கரங்களும் தானே இயங்கும்.
• மனிதப்பிறப்பின் நோக்கமே பகுத்தறிவால் இறையை தன்னுள் மட்டும் இன்றி
அனைத்து உயிர்களிலும் காண்பதாகும்.
• மனதாலும், செயல்களாலும், உடலாலும் எந்த உயிரையும் துன்புறுத்தாமல்
இருந்தால் அருட்பெருஞ்ஜோதியை எளிதாக காண இயலும் என்பதை உணருங்கள்.
• பிற உயிர்களை கொன்று பரிகாரம் செய்தால் மேலும் துன்பங்கள் வரும்
என்பதை உணருங்கள்.
• ஜீவ காருண்ய ஒழுக்கமில்லாமல் செய்யப்படும் பரிகாரங்கள் விழலுக்கு
விடும் தண்ணீராகும்.
• வீட்டின் வண்ணத்தை மாற்றி பரிகாரங்கள் தேடாமல் உங்கள் எண்ணத்தை மாற்றி
பரிகாரம் தேடுங்கள், நீங்கள் தேடும் சந்தோஷம் –நிம்மதி –ஆனந்தம்
கிடைக்கப்பெறுவீர்கள்.
***************
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
**********
--
To register to this vallalargroups, and Old Discussions
http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment