சமாதிக் கட்டளை
1. சமாதி வற்புறுத்தல் என எச்சரிக்கை பத்திரிகை கைப்பட எழுதியுள்ளார்கள்.
2. சமாதி வற்புறுத்தல் என பதிகம் இயற்றி உள்ளார்கள்.
சில வாசகங்கள்::
1.சுடுவது கொலை
2. சிரம் நெளிக்க சுடுகின்றீர்
3. சுடுவது அபராதம்
4. பணம் புதைக்க சம்மதிக்கும் நீர் ஏன் பிணம் புதைக்க சம்மதீயீர்?
5.இறந்தவரை எரிப்பது என்பது தூங்குபவனை எரிப்பதற்கு சமம்.
நண்பர்களே, நலம்சார் பண்பர்களே, இறைசார் அன்பர்களே நமது 'சாகாஅருளர் வள்ளலார்' இதனை உலகியலர்களுக்கு "சமாதிக் கட்டளை" என்றே நமக்கு கட்டளை (ORDER) இடுகின்றார். ஓர் அரசின் அதிகாரத்தை பெற்றவர்கள் மட்டுமே கட்டளை இடமுடியும் என்பது தெரிந்ததே. அதுபோல 'சாகாஅருளர் வள்ளலார்' அருட்பெருஞ்ஜோதி' ஆண்டவரின் 'செங்கோலை' பெற்று அண்ட சராசரங்களையும் தற்போதும், எப்போதும் ஆட்சி செய்து வருகின்றார், அப்படிப்பட்ட சாகாஅருளரின் அரசக் கட்டளைதான் இது. இதனை மீறுபவர்கள் தாங்களகவே சுடுகாட்டில் தண்டித்துக்கொண்டுவிடுகிறார்கள் என்பதனைக் கவனிக்க வேண்டும்.
அது என்ன 'சமாதிக் கட்டளை' என்பதனை பார்ப்போம்...
இக்கட்டளை நமது 'சாகாஅருளர் வள்ளலார்' 30-03-1871 ஆம் ஆண்டு தமது அரச ஆணையாக வெளியிட்டார், அதனை அப்படியே இங்கே மீண்டும் (26-04-2013) இவ்வுலக மக்களுக்காக சாகாஅருளரின் ஆணைப்படி வெளியிடுகிறேன்.
அன்புள்ள நீங்கள் சமரச வேதசன்மார்க்க சங்கத் தருமச் சாலைக்கு மிகவும் உரிமையுடையீர்க ளாகலின் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது.
நீங்களும் உங்களை அடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளாற் சுகமாக வாழ்வீர்களாக,
கர்மகால முதலிய பேதங்களால் யார்க்காயினுந் தேக ஆனி நேரிட்டால் தகனஞ் செய்யாமல் சமாதியில் வைக்கவேண்டும். இறந்தவர்கள் திரும்பவு மெழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுந் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தையுடனிருக்க வேண்டும். புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் புருடன் வேறு கல்யாணப் பிரயத்தனஞ் செய்யவேண்டாம். பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம். கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்யவேண்டாம். தெரிவிக்கத்தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும். இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள். செய்திருந்தால், சமரசவேத சன்மார்க்க சங்கமும் மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் சிதம்பரஞ் கோயில் திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெறவிளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணை கூர்ந்துஎனது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் சமரச வேதசன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்குந் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக விருக்கின்றது அந்தத் தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகியிருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்தருளுவார். இது சத்தியம். இது சத்தியம். இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்து கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பியருளுவார். இது வெளிப்பட்டறிந்த பின் தகனஞ் செய்தல் கூடாது அது சன்மார்க்கத்திற்கு தக்கதல்ல. ஆகலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக.
எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு எனது தந்தையார் திருவருளை நாம்அடையும் வரையில், என்னுடன் பழகியும் என்னை நம்பி யடுத்தும் என்னைக் கேள்வியால் விரும்பியும் எனக்கு உரிமைப்பட்டும் இருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய பெருங்கருணை வள்ளல் சாலைக்கு உரியவர்களாகி யிருந்தும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரம் செய்தேயருளுவர். ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள். ஆகலில் நம்பிக்கையுடன் இருங்கள். பெரிய களிப்பை யடைவீர்கள். இது சத்தியம். இது சத்தியம்.
பிரமோதூத வருடம் பங்குனி மாதம் 18. பார்வதிபுரம்.
இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்
No comments:
+Grab this
Post a Comment