அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
தாவரங்களும் உயிர்கள் தானே,
அவ்வுயிர்களைக் கொன்று உண்பது பாவம் இல்லையா ?
**********************************
ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு எனது பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.
சன்மார்க்கம் அல்லாத பல சகோதர சகோதரிகளுக்கு பின்வரும் ஒரு சந்தேகமும், கேள்வியும் பல காலங்களாக இருந்துகொண்டேதான் இருக்கின்றது அவற்றைப்பற்றி பெருமான் தெளிவாக விளக்கி இருக்கின்றார்கள், அதைசற்று விபரமாக நாம் தற்போது பார்ப்போம்;
உயிர்களில் பேதம் இல்லை ,
அறிவில்மட்டும்தான் பேதம் உள்ளது ,
கடவுள் எல்லா உயிர்களுக்குள்ளும் ஆன்மாக்களை தனது திருநடனமிடும் சபையாகக்கொண்டு அதன் உள்ளொளியாக இருந்து எல்லா உயிர்களுக்கும் பொதுவாக இருந்து நடம்புரிகின்றார்கள் என்றால் ,
தாவரங்களிலும் அதே ஆண்டவரின் அருளொளிதானே உள்ளிருந்து அவ்வுயிரைக் காத்து வருகின்றது .
1:அப்படி என்றால் அந்த உயிர்களை இம்சை செய்து வெட்டியும், ஒடித்தும், காய்களை, பழங்களை பறித்தும் அடித்தும், தண்டு இலை காய்களை சமைத்தும் நாம் உண்டு அனுபவிப்பது பாவம் இல்லையா ?
அதுவும் ஏகதேசமாய் ஒருவகையில் தாமச குண ஆகாரம்தான் , அந்த ஆகாரத்தை உண்டு அதனால் கிடைத்த உடல் மன சந்தோஷங்களும் அசுத்த கரண சந்தோஷங்களேயாகும்.
ஆனாலும் அப்படி நினைத்தல் கூடாது;
2: ஏன் அப்படி நினைத்தல் கூடாது ?
கடவுள் எல்லா உயிர்களுக்குள்ளும் உயிராயும், உணர்வாயும் விளங்குவது அனைவரும் அறிந்ததுதான்,
அதேபோன்று புல், செடி, மரம் முதலான தாவரங்கள் எல்லாம் பரிசம்(தொடு உணர்வு) என்ற ஓரறிவுடைய தாவரங்களே ஆகும்.
அவற்றின் உடம்பிலும் ஜீவ விளக்கம் ஒருசார் விளங்குகின்றது என்பதும் உண்மையே.
ஆனால்,
A: இந்த தாவரங்கள் உருவாவதற்கு காரணமான வித்தாகிய விதைகள் எல்லாம் விதைப்பதற்கு முன்பு மற்ற வித்துக்களைப் போன்றே அறிவற்ற வெறும் சடமாகத்தான் இருந்தது என்பதை அறிதல் வேண்டும்.
ஏன் என்றால் அந்த விதையில் உயிர் இருந்திருந்தால் அவற்றை நாம் விதைப்பதற்கு முன்பே முளைத்திடவேண்டும் இல்லையா,
ஆனால் அப்படி முளைக்க இயலாது ஏனென்றால் அவைகள் உயிரற்ற சடங்களாக இருந்தன.
B: அவ்விதைகளை நாமே நிலத்தில் விதைத்து அவற்றிற்கு நீர்விடுத்து
உயிர்உண்டாக்குகின்றோம் என்பதாலும்,
C: அவற்றின் உயிர் இருக்கும் பகுதியான வேர்களை பிடுங்கி வேறுசெய்யாமல் அந்த உயிரால் விளைந்த உயிரற்ற சடங்களாகவும்,
அதே சமயத்தில் மீண்டும் வேறு உயிர்கள் தோன்றுவதற்கு இடமாக இருக்கும் அதனது சடமாகிய வித்துக்களையும், காய்களையும்,கனிகளையும்,பூக்களையும்,கிழங்குகளையும்,தழைகளையும்,ஆகாரங்களாகக் கொள்ளுகின்றோமே அன்றி ,
அவற்றின் உயிருள்ள வேராகிய முதல்களை நாம் ஆகாரமாகக் கொள்ளுவதில்லை ,
அவ்வாறு இல்லாமல் அவற்றின் வேரைப் பிரித்து ,மண்ணில் இருந்து பிடுங்கி அவற்றின் உயிரைப் போக்கி உண்பதுவும் ஒருவித பாவமேயாகும்.
3:கடவுள் எல்லா தேகத்திலும் உயிராவும் உணர்வும் இருக்கின்றார்கள் என்றால் அந்த தாவர உயிர்களுக்குள்ளும் இன்ப துன்ப உணர்வுகள் இருப்பதில்லையா ?
A:நிச்சயமாக தாவரங்களுக்கு உணர்வுகள் உண்டு , ஆனால் அவற்றின் வித்து காய் கனி தழை தண்டு முதலியவைகளைக் கொள்ளும்போது ,
நமது உடம்பின் ஒரு பகுதியாகிய நகங்களும், ரோமங்களும், சுக்கில சுரோணிதங்களும் எப்படி நீக்கும்போது வலியில்லாமல் இருக்கின்றதோ , அதேபோன்ற உணர்வுகள்தான் அவைகளுக்கும் இருக்கும் என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும்;
B:அதுமட்டுமல்ல அவற்றின் கிளைகளை வெட்டி ஒரு இடத்தில் இருந்து மறுஇடத்தில் மண்ணில் வைத்து உயிர் ஊட்ட முடியும்,
அதுவும் இல்லாமல் வெட்டிய இடத்தில் ஒன்றுக்கு பலத்துளிர்கள் திருவருள் கருணையால் கிளைத்திடும் என்பதும் நாம் அறிந்ததேயாகும்.
C: அதுவுமன்றி தாவரங்களுக்கு மனம் ,புத்தி,சித்தம்,அகங்காரம் முதலிய அந்தக் கரணங்கள் விருத்தியில்லாதபடியால் அவைகள் உயிர்கொலையும் அல்ல அவற்றிற்கு துன்பம் உண்டுபண்ணுவதும் அல்ல,
என்பதையும் அறிதல் வேண்டும்.
அதனால் அது "ஜீவகாருண்ய விரோதமாகாது";
D: அந்த தாவர ஆகாரத்தினால் வந்த சந்தோஷமும் ஜீவ விளக்க சகிதமான கடவுள் விளக்கமே ஆகும் என்பதை அறிதல்வேண்டும்;
ஆகலில் உயர்வுடைத்தாகிய ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு எல்லாம் ஆகாரமாக கடவுள் விதித்த அருள்நியதி உணவு தாவர உணவேயாகும் என்பதை உறுதியாக அறிதல்வேண்டும் .
.......நன்றி,
.......வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,
.........பெருமான் துணையில்,
..........வள்ளல் அடிமை,
............வடலூர் இரமேஷ்;
No comments:
+Grab this
Post a Comment