அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
ஞான சரியை
********
ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவோடு தெரிவித்து மகிழ்கின்றேன்.
நமது திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் இவ்வுலகவர்களின் புறக்கண்ணுக்கு தெரியாத வண்ணம் அருட்பெருஞ்ஜோதியில் கலந்து நிறைந்து நமது அகத்தில் வந்தமர்வதற்கு முன்பு,
நம் அனைவரையும் உய்விக்கும் பொருட்டு திருவருட்பா ஆறாம் திருமுறையில் "ஞான சரியை" யில் குறிப்பிட்டுள்ள வண்ணம் நீங்கள் அனைவரும் ஆண்டவரை வழிபட்டுவாருங்கள் என்று அறிவுறுத்தினார்கள்.
ஞானசரியை என்பது ,
சித்தர்கள் வகுத்த இறைஒழுக்கங்களான சரியை கிரியை யோகம் ஞானம் என்ற 16படிகளில் வருகின்ற 13 வது படியாகவும் கொள்ளலாம்,
அல்லது எல்லாம் வல்ல கடவுளது "மெய்யறிவை" அடைவதற்குரிய பக்குவத்தை பெறுவதற்கு நமது "அறிவை ஒழுக்கப்படுத்துவதற்கு"
"நெறிப்படுத்துவதற்கு" உரிய வழிப்பாட்டுமுறைகள் என்றும் கொள்ளலாம்.
அப்படி நம்பொருட்டு பெருமான்
தயவுடன் கொடுத்தருளிய ஞானசரியை பதிகத்தின் முதல் பாடலின் பொருளை ஒருவாறு எனது சிற்றறிவில் உதித்துவித்த வண்ணம் இங்கே தங்கள் அணைவரிடமும் பகிர்ந்துகொள்கின்றேன்.
இப்பாடலில் இரண்டு முறை வருகின்ற வார்த்தைகள் எல்லாம் அடுக்குத்தொடர் வார்த்தைகள் என்று நினைத்தல் கூடாது , அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட இரண்டு பொருளை உணர்த்தக்கூடியவைகள்
என்பதை உணர்வோம்.
பாடல்;
நினைந்து நினைந்து ;
***********************
ஆன்மாக்களாகிய நாம் ஆண்டவரை வழிபடும்போதும் மட்டுமல்ல மற்ற எல்லா சமயங்களிலும் நமது சிறுமைகுணத்தை முதலில் வெளிப்படுத்தி பிறகு இறைவனின் பெருமைகளை போற்றவேண்டும்,
வள்ளல் பெருமான் திருவருட்பா பாடல் ஒவ்வொன்றிலும் கவணித்தோமானால் தன்னைக்காட்டாத வண்ணம் ,
நான் எனது என்ற "தற்போத" அகங்காரத்தை எழும்பவிடாத வண்ணம் ,
நாயினும் கடையேன்,
ஈயினும் இழிந்தேன்,
புன்னிநிகர் இல்லேன்,
மலத்தில் புழுத்த புழுவினும் சிறியேன்,
இன்னும் எவ்வளவோ சிறுமையான வார்த்தைகளால் முதலில் தன்னைத்தானே இழிவாகச் சொல்லி பிறகு இறைவனை போற்றி புகழ்வார்கள்.
அதுபோன்றே நாமும் நமது சிறுமைகளாகிய குற்றங்களை முதலில் நினைத்தும் பிறகு ஆண்டவனின் பெருமையை நினைத்தும் ஆண்டவரை வழிபடுதல் வேண்டும் என்பதாம்.
உணர்ந்து உணர்ந்து ;
***********************
ஆண்டவரை கலைகளால் உணர்வது ஒன்று அனுபவத்தால் உணர்வது ஒன்று,
அதாவது படித்த சாத்திரத்தாலும்,
தோத்திரத்தாலும்,
பிறர் சொல்லக்கேட்ட
கேள்வி ஞானத்தாலும், இறைவனை ஆராய்ந்து அறிந்து உணர்வது என்பது ஆண்டவனை "சாத்திரத்தால் உணர்வது" என்பதும்
"சாத்திர ஞானம்" என்றும் "படிப்பறிவும்" என்பதுமாகும்.
மற்றொன்று ஆண்டவரை படித்த சாத்திரத்தாலும் ,பிறர் சொல்லக்கேட்ட ஞானத்தாலும் அறிந்து "அனுபவித்து உணர்வது" என்பதாகும் .
இது "அனுபவ ஞானம்" "அனுபவ அறிவு".என்பதாகும்.
இங்கு அறிவது என்பது ஆராய்ச்சி,
உணர்வது என்பது அனுபவம்;
இறைவன் அனுபவத்தில் விளங்குபவராய் இருப்பதால் அனுபவஞானமே சிறந்தது என்பதாகும்;
நெகிழ்ந்து நெகிழ்ந்து ;
*************************
ஆண்டவரை வழிபடும் போது முதலில் உள்ளமாகிய மனம் நெகிழ்தல் வேண்டும் பிறகு உயிராகிய ஆன்மா நெகிழுதல் வேண்டும் .
ஆன்மா நெகிழ்ந்தால்தான் அதனுள் இருக்கின்ற இறைவனை நமது அன்பாலும் அழுகையாலும் நெகிழ்விக்க முடியும்.
வள்ளல் பெருமான் பிள்ளபெறுவிண்ணப்பத்தில் ஒருபாடலில் ,
"நிருத்தனே நின்னை துதித்தபோதெல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் ,பருத்த எனது உடம்பை பார்த்திடற்கு அஞ்சி ஐயோ படுத்தனன் எந்தாய்" என்பார்கள்;
ஆகலில் மனம் நெகிழ இறைவனை வழிபடுதலைக்காட்டிலும்,
ஆன்மா நெகிழ இறைவனை வழிபடுதலே சிறந்ததாகும்;
அன்பே நிறைந்து நிறைந்து;
*******************************
அன்பு என்பது இரண்டுவகையாக உள்ளது ,
1:காமிய அன்பு,
2: நிஷ்காமிய அன்பு.
காமிய அன்பு என்பது ஏதோ ஒரு பொருளின் பொருட்டோ அல்லது ஒரு பயனை எதிர்பார்த்தோ ஒருவரிடம்
அன்புகொள்ளுவது என்பது காமிய அன்பு என்பதாகும்.
காமியம் என்பது செயல் அல்லது வினை என்ற பொருள்படும்.
நிஷ்காமிய அன்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் ஆன்மநேயத்தோடு மற்றவர்கள் மீது அன்புகொள்வது என்பதாகும்.
இதேபோன்று இறைவனை வழிபடும்போதும் முதலில் ஏதோஒன்றுஎதிர்பார்த்து பிறகு எதையும் எதிர்பார்க்காமல் இறைநேயத்தோடு அன்பு செலுத்துவது என்பதாகும்.
காமிய அன்பு மாறக்கூடியது,
நிஷ்காமிய அன்பு என்றும் மாறாதது,
வள்ளல் பெருமான் நமது ஆண்டவர்மீது மாறாஅன்புகொள்வீர் என்பார்கள்;
ஆகலில் நிஷ்காமிய அன்பே சிறந்தது என்பதாகும்.
ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து,
******************************
மேற்கூறிய வண்ணம் ஒரு ஆன்மா, தனது சிறுமையை நினைத்தும் உணர்ந்தும் நெகிழ்ந்தும் வருந்துகின்றபோது ,கண்ணீர் பெருக்கெடுத்து வெளிவரும் அது முதலில் அழுகை கண்ணீராக வருகின்றது ,
பிறகு இறைவனின் பெருமையை நினைத்தும் உணர்ந்தும் நெகிழ்ந்தும் இறைவனையே பற்றி வருந்துகின்றபோது ஆணந்தகண்ணீர் வருகின்றது,
இந்த இரண்டு கண்ணீரும் பெருக்கெடுத்து உடம்பு நனைக்கப்படுகின்றது;
இந்த அனுபவத்தை வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி அகவலில் 1460வது வரிகளில்,
"உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணீல் நீர் பெருகிக் கால்வழிந்து ஓடிட" என்று தெரிவித்து
நமக்கு வெளிப்படுத்துவார்கள்;
அருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து
ஏத்துதும்நாம் வம்மின் உலகியலீர்.
*****************************************
மேற்கூறிய வண்ணம் அழுது தொழுது கண்ணீர் பெருகி உடம்பெல்லாம் நனைய அருளாகிய அமுதத்தை வழங்கக்கூடிய அருளமுதமே,
இவ்வுலகமெல்லாம் தழைத்து இன்பம்பெற ஞான நடம்புரிகின்ற அரசே, எழுபிறப்பிலும் எனது உயிருக்கு உற்றதுணையாக வருகின்ற என்உரிமையுடைய தலைவனே என்று எண்ணத்தாலும் சொல்லாலும் அலங்கரித்து அலங்கரித்து துதித்து வணங்கிடுவோம் வாருங்கள் உலகவரே என்று இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அழைக்கின்றார்கள் நமது பெருமான்.
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்,
*******************************
மேற்கூறியபடி ஆண்டவரை நினைந்து,உணர்ந்து,நெகிழ்ந்து,அன்புநிறைந்து நிறைந்து ஊற்றெழுந்து வருகின்ற கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து வருந்தி துதித்து வணங்கினால் மரணத்தை வென்று இவ்வுலகில் நிலையாக வாழக்கூடிய அருட்பெருவாழ்வு பெற்று வாழ்ந்திடலாம் கண்டீரோ என்கின்றார்கள்.
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
*************************************
உலகவர்களே நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பிள்ளை என்பதற்காகவும் ,
அவர் எனது தந்தை என்பதற்காகவும் ஒருதலையாக நின்று ஆண்டவரைப்பற்றிய வார்த்தைகளால் இங்கு சிறப்பித்து அழகுபடுத்தி பெருமைப்பட சொல்லவேண்டும் என்று பொய் சொல்லவில்லை ,
சத்தியமாகவே சொல்லுகின்றேன் உலகவரே,
இந்ததருணம்தான் பொற்சபை சிற்சபை என்று சொல்லக்கூடிய பரமாகாச்திலும் சிதாகாசத்திலும் புகுந்துகொள்ளக்கூடிய தருணமாக இருக்கின்றது ஆகலில் விரைந்து வாரீர் என்று உலகவரை அன்போடும் ஆவலோடும் அழைக்கின்றார்கள் நமது பெருமான்;
சுத்தசன்மார்க்கமே சிறந்தது;
சுத்தசன்மார்க்கமே நிலைப்பது;
என்றுணர்ந்து அணைவரும் வாரீர் ;
....நன்றி,
.......வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,
........பெருமான் துணையில்,
.........வள்ளல் அடிமை,
...........வடலூர் இரமேஷ்;