Friday, November 11, 2011

[vallalargroups:4379] எனக்கு விருப்பமான பத்து நகுலன் கவிதைகள் இவை.


பிடித்த கவிதை :

 எனக்கு விருப்பமான பத்து நகுலன் கவிதைகள் இவை.


1)



வந்தவன் கேட்டான்
`என்னைத் தெரியுமா ? `
`தெரியவில்லையே`
என்றேன்
`உன்னைத்தெரியுமா ?`
என்று கேட்டான்
`தெரியவில்லையே`
என்றேன்
`பின் என்னதான் தெரியும்`
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.


***
2


களத்துமேட்டில்
வாளுருவி
மீசைதிருகி
நிற்கிறான் ஒரு மாவீரன்
போகும் பறவைகளனைத்தும்
அவன் தலை மீது
எச்சமிட்டன
அவன் மீசையை
எறும்புக்கூட்டங்கள்
அரித்தன
ஆனால் அவன் முகத்திலோ
ஒரு மகா சாவதானம்.


***


3


ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா 
இந்தச் சாவிலும் 
ஒரு சுகம் உண்டு.


***


4


அம்மாவிற்கு
எண்பது வயதாகிவிட்டது
கண் சரியாகத்தெரியவில்லை
ஆனால் அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்காருகிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக்கண்டு
உவகையுறுகிறாள்
மறுபடியும் அந்தக்குரல்
ஒலிக்கிறது
நண்பா அவள்
`
எந்த சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள் ?`
 
***
5



தன்மிதப்பு
யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலைச்
சீவிக் கொண்டிருந்தான்
அவனைப்போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது – அது
கூடத்தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகரியமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் – இந்த
நிலைமையையும் தன்னுடைய
வெளித்தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்


***


6


இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல் 
போகிறோம்


**


7


எனக்கு
யாருமில்லை
நான்
கூட..


**
8


அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.


*


9


நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.
*


10)


யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்.


***
துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.
-தேவதச்சன்


நவீன தமிழ் கவிதையுலகில் எனக்கு விருப்பமான மூன்று கவிஆளுமைகள் பிரமீள், நகுலன் மற்றும் தேவதச்சன் . அவர்கள் தங்களுக்கெனத் தனியான கவித்துவ மொழியும் அகப்பார்வையும் தனித்த கவியுலகமும் கொண்டவர்கள்.


மூவரது கவிதைகளிலும் அடிநாதமாக தமிழின் கவித்துவமரபும் சங்க இலக்கியம் துவங்கி சமகால உலக இலக்கியம் வரை வாசித்த நுட்பமும் ஒடிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த மூவருக்கும் பொது ஒற்றுமைகள் கிடையாது. தன்னளவில் இவர்கள் தனித்துவமான ஆளுமைகள். இவர்களின் பாதிப்பு இளம்கவிஞர்களிடம் கண்கூடாக காண முடிகிறது. மூவருடன் பழகி பேசி நிறைய அறிந்திருக்கிறேன்.



நகுலன் கவிதையை எவ்வளவோ முறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது தரும் அகநெருக்கமும் குதூகலமும், வியப்பும் உச்சநிலையிலே இருக்கின்றது. புரியாமல் எழுதக்கூடியவர், இருண்மை கவிஞர் என்று அவரைப்பற்றிய குழப்பமான விமர்சனங்கள் யாவும் அர்த்தமற்றவை.


நேரடியான மொழியில் வாழ்வின் உக்கிரமான தருணங்களை கவிதையாக்கியவர் நகுலன். அவரது கவித்துவ மொழியும் பிரயோகமும் அபூர்வமானது. நகுலனின் ராமசந்திரன் கவிதை மிகவும் பிரபலமானது. அந்தக் கவிதை குறித்து ஏளனமாகவும், தீவிரமாகவும் இன்றும் வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நகுலனின் கவிதைகள் பன்முகப்பட்டவை. 


நகுலன் அன்றாட காட்சிகளிலிருந்து தனது கவித்துவ உலகிற்கான உந்துதலை பெறுகிறார். ஒருவகையில் சம்பவங்கள் நிகழ்வுகள் என்று கதை எதில் மையம் கொள்கிறதோ அந்த நிகழ்விûன் சிறு பொறியிலிருந்து அவரது கவிதை உருவாகிறது.


நகுலனின் கவிதைகளின் சிறப்பம்சம் அது பெயர்களை பயன்படுத்தும் விதம். கவிதையில் இடம் பெறும் பெயர்கள் தனிநபர் தோற்றங்களை உருவாக்குவதில்லை மாறாக அவையும் படிமம் போலவே உயர்நிலை கொண்டுவிடுகின்றன. அது போலவே உள்ளார்ந்த பரிகாசம் அவரது கவிதையின் தொனியாக பல கவிதைகளிலும் காணமுடிகிறது.


சந்திப்பு என்பதை அவர் தற்செயல் என்று கருதுவதில்லை பெரும்பாலும் அவர் கவிதையின் முக்கிய புள்ளியாக சந்திப்பு இடம் பெறுகிறது. யாரோ யாரையோ சந்திக்கிறார்கள். எதையோ கேட்கிறார்கள். அல்லது சொல்கிறார்கள். இதில் அவர்கள் உரையாடல் அளவிற்கு இந்த சந்திப்பு ஏன் நடைபெற்றது என்ற புதிர்மையும் உருவாகிறது


கவிதையின் மௌனத்தை மிக கவனமாக சிதறடிக்க கூடியவர் நகுலன். எளிய உரையாடல்களின் வழியே அது நிகழ்கால தன்மையை உருவாக்கி அதிலிருந்து உயர்பொருளுக்கு நகர்கிறது. பேச்சு என்பதை இரு நிலைகளில் நகுலன் கையாளுகிறார். ஒன்று எப்போது தனக்கு தானே நடந்து கொண்டிருக்கும் முடிவில்லாத செயல். மற்றது பிரதிபலிப்பு போல எது சார்ந்தோ அவ்வப்போது நடைபெறும் நிகழ்வு. இரண்டு நிலைகளும் அவர் கவிதைகளில் காணமுடிகிறது


நகுலனுக்குள் இயங்கும் அறவுணர்வு திருக்குறளில் இருந்தே அதிகம் உருவாகியிருக்கிறது. அவர் திருக்குறளை உரையாடலை போலவே அறிந்திருக்கிறார். ஒருவர் மற்றவரிடம் கேட்பது அல்லது பரிமாறிக் கொள்வது என்று தான் திருக்குறளின் தொனியை அடையாளம் காட்டுகிறார்.ஆகவே பல குறள்கள் அவருக்கு தனிமொழி போல உபயோகப்படுத்தபடுகிறது.


ஜென் கவிதைகளில் காணப்படுவது போல தோற்றத்திலிருந்தே அதை கடந்து செல்லும் நிலையை உருவாக்குவது தொடர்ந்து செயல்படுகிறது. அன்றாட செயல்பாடுகளை அவர் தியானநிலை போலவே அடையாளம் காண்கிறார். பலநேரம் தன் வாழ்க்கை என்பதை பல்வேறு தனித்த மற்றும் ஒன்றிணைந்த சொற்களின் விளையாட்டுகளமாக கருதுகிறார். 


கவிதைகளில் வெளிப்படும் அவரது நினைவுகள் புனைவும் நிஜமும் கலந்தவை. ஒருவகையில் அவரது இருப்பே புனைவும் நடப்பும் கலந்த ஒன்று தான். காண் உலகிலிருந்து நழுவிப் போக விரும்பும் அவர் நழுவிப்போய்விட்டதை பிரக்ஞை பூர்வமாக உணரவும் முற்படுகிறார். இந்த இருநிலை பலநேரங்களில் அவரிடம் அநாயசமாக கைகூடுகிறது.


கலாப்ரியா நடத்திய குற்றாலம் கவிதை பட்டறைக்கு ஒரு முறை நகுலன் வந்திருந்தார். அவர் அருகிலே உட்கார்ந்திருந்தேன். நகுலனிடம் ஒரு பழக்கம் உண்டு. உன்னிப்பாக எதையோ கவனித்துக் கொண்டிருப்பார். சட்டென அதிலிருந்து விலகி அருகில் உள்ளவரை பார்த்து சிரிப்பார். என்ன நினைத்து சிரிக்கிறார் என்று அறிந்து கொள்ள முடியாது.



என் அருகில் உட்கார்ந்தபடியே வெற்றிலை போட்டுக் கொண்டபடியே வெற்றிலை காம்பை கிள்ளி என் கையில் தந்தார். எதற்கு என்று கேட்டேன். பத்திரமாக வச்சிக்கோங்க சொல்றேன் என்றபடியே சபையில் நடைபெற்ற உரையாடலை கவனிக்க துவங்கினார். பிறகு தேநீர் இடைவேளயின் போது கூடவே வந்து அந்த காம்பை என்ன செஞ்சீங்க என்று கேட்டார். கிழே போட்டுவிட்டேன் என்றேன்.


 உடனே அவர் சிரித்தபடியே உபயோகமில்லாததை நாம் கையில் வைத்துக் கொள்வது ஏன் மனதிற்கு பிடிக்கவே மாட்டேன் என்கிறது. அதுக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா ?.என்றபடியே தன் நினைவுகளை சொல்லத்துவங்கினார்


 என்னுடைய அம்மா ஒரு நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு சுவர்ல விளக்கோட நிழல் ஊர்ந்து போறதே அது சுவத்தில ஏன் படியுறதேயில்லைனு கேட்டா. எனக்கு அப்போ விபரம் புரியாத வயசு. பதில் சொல்ல தெரியலை. அவளாகவே நாமளும் அப்படிதான் என்று சொன்னாள். எனக்கு பயமா இருந்துச்சி.


எங்கம்மாவுக்கு சித்தபிரமை உண்டு. அவள் எதையோ நினைச்சிகிட்டே இருந்தாள். ஏன் சார் சில நினைப்புகள் நம்ம வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வந்துகிட்டே இருக்கு. சம்பந்தபட்ட ஆட்கள் செத்து போயாச்சி. ஆனா நினைப்பு மட்டும் போக மாட்டேன் என்கிறதே. அது ஏன் என்று கேட்டார். வியப்போடு அவரை பார்த்து கொண்டிருந்தேன்.


தான் போட்டுக் கொண்டிருந்த வெற்றிலை எச்சிலை துப்பினார். அது தரையில் பட்டு சிவப்பாக தெறித்திருந்தது. பலத்த சிரிப்போடு யாரோ யாரையோ குத்தி ரத்தம் வர வச்சிட்ட மாதிரி இருக்கில்லே என்றபடியே நான் துப்பிய எச்சில் ஒரு எறும்பு மேல பட்டிருக்கு பாருங்க. அது சிவப்பா நிறம் மாறி திகைச்சி போய் நடுங்கிகிட்டே போகுது. அது என்ன சார் நினைச்சிக்கு. வானத்தில இருந்து சிவப்பா மழை பெஞ்சதா நினைச்சிக்குமா.


 இப்படி எல்லாம் மனசுல தோணுறதே எனக்கும் சித்தபிரம்மை இருக்குமா. சொல்லுங்கோ என்றார்


நகுலனை பல முறை சந்தித்திருக்கிறேன். அவரது பேச்சில் காணப்படும் வியப்பு அவரது மௌனத்தில் காண முடிந்திருக்கிறது. சிறு சிரிப்பு வியப்பு சாலையில் செல்லும் இளம்பெண்களை உற்சாகமாக கைகாட்டி விடை தருவது. பூனையை சலனமில்லாமல் பார்த்து கொண்டிருப்பது என்று தன் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் வாழ்ந்த மகத்தான கலைஞன் நகுலன்.



--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)