அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை...' என்று கருணைக் கடலாக அறியப்பட்டவர் வடலூர் ராமலிங்க வள்ளலார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று சொன்ன வள்ளலாரை எதிர்த்து, கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் கழித்து, சென்னை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு! 150 ஆண்டுகளுக்கு முன்பும் வள்ளலாருக்கு எதிராக பிரிட்டிஷ் காலத்திலேயே பிரபலமான ஒரு வழக்கு வாதாடப்பட்டது. அந்த ஃபிளாஷ்பேக் முதலில்... ஜீவகாருண்யம், பசியாற்றுவித்தல், சாதிமத வேறு பாடின்மை, ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகிய நான்கையும் வலியுறுத்திய வள்ள லார், சன்மார்க்க சங்கத்தை உருவாக்கி சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் ஆகியவற்றை வடலூரில் நிறுவினார். 'கடவுளை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபட வேண்டும்' என்பது வள்ளலாரின் எண்ணம். அப்படி அவர் உருவ வழிபாட்டை மறுத்ததால், வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ''அவர் எழுதியதை அருட்பாவாக ஏற்க முடியாது. தேவாரம், திருவாசகம்தான் அருட்பாக்கள். இவை வெறும் மருட் பாக்கள்!'' என்று யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் தலைமையிலான தீவிர சைவர்கள் கடுமையாக எதிர்த் தார்கள். ''தன்னை உணர்ந்தோர் பாட்டெல்லாம் அருட்பா. மற்றதெல்லாம் மருட்பா!'' என்று இதற்கு வள்ளலார் விளக்கம் அளித்தார். 'ஆறுமுக நாவலரின் பெயரைச் சொல்லி ஒரு கூட்டத்தில் வள்ளலார் கிண்ட லடித்ததாக' கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. அன்றைய தினம் வள்ளலாரே நீதிமன்றத்துக்கு நேரில் வர... அப்போது வழக்குப் போட்ட ஆறுமுக நாவலரே, வள்ளலாரை எழுந்து நின்று வணங்கினார். இதைப் பார்த்த நீதிபதி, ''எதிரிகளாலும் வணங்கத்தக்க வள்ளலார் தவறாகப் பேசியிருக்க மாட்டார்!'' என்று ஆங்கிலேய ஆட்சியிலேயே வழக்கைத் தள்ளுபடி செய்தார். இந்நிலையில்தான், தற்போது சபானந்த ஒளி சிவாச் சாரியார் என்பவர் வடலூர் கருவறையில் லிங்க உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார். இதை இந்து சமய அறநிலையத் துறை ஏற்கவில்லை. 'வள்ளலார் உருவ வழிபாட்டை ஏற்காமல்... ஜோதி வழிபாட்டையே ஏற்றார்!' என்பதைச் சொல்லி, 'உருவம் எதையும் வைக்கக் கூடாது' என்றது. இந்த உத்தரவுகளுக்குத் தடை விதிக்கக் கேட்டுதான் சிவாச்சாரியார் சென்னை உயர் நீதிமன் றத்தை அணுகினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் சந்துரு ஒரு மகத்தான தீர்ப்பை அளித்திருக் கிறார். ''சாதிமத வேறுபாடுகளைக் கண்டித்த மாபெரும் மனிதாபிமானி வள்ளலார். 'சாதியும் மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி' என்று அவர் பாடியதுதான் 1872-ம் ஆண்டும் பிரிட்டிஷ் அரசு, சாதிக்கு எதிரான சட்டம் கொண்டுவரத் தூண்டுகோலாக அமைந்தது. அப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, கடலூருக்கு அருகில் அணையாத அடுப்புகளை உருவாக்கி அன்னசாலை அமைத்தார். அன்று இருந்த அந்நிய ஆட்சியை எதிர்த்து, 'கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக... அருள் நியந்த நன்மார்க்கர் ஆள்க' என்று பயமில்லாமல் பாடிய வள்ளலார், சிறந்த மனிதாபிமானியாகவும் சாதி மதத்துக்கு எதிரானவராகவும் இருந்தார். அவரது ஆன்மிக எண்ணங்கள் ஜோதியை அடிப்படையாகக்கொண்டே இருக்கின்றன. 'ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி என் உளத்தே' என்று பாடி இருக்கிறார். 'சமயம் குலம் முதல் சால்பு எலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெருஞ்சோதி' என்கிறார். இந்த ஜோதி வழிபாட்டை முன்னெடுக்கும் நோக்கத்துடன்தான், சத்திய ஞான சபை தொடங்கப்பட்டது. அதில் எப்படிப்பட்ட வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று 18.7.1872-ம் நாள் நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. ஜோதி வழிபாட்டைத் தவிர, வேறு எதற்கும் வழி கிடையாது என்று அதில் திட்ட வட்டமாகக் கூறப்பட்டுள்ளது. 'தகரப் பெட்டியில் வைத்து ஜோதியைஏற்ற வேண்டும். அது கண்ணாடியில் பிரதிபலிக்க வேண்டும். எண்ணெய் பயன்படுத்தி ஜோதியை ஏற்ற வேண்டும். ஜோதி காட்டப்படும்போது அனைவரும் மௌனமாக இருக்க வேண்டும். 'அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி' என்ற மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும். இதில் பங்கேற்பவர்களுக்கு, வேதங்களிலோ, ஆகமங்களிலோ, புராணங்களிலோ, இதிகாசங்களிலோ, நம்பிக்கை இருக்கக் கூடாது. இதில் பங்கேற்பவர்களுக்கு, சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய பிற மதங்களின் மீது நம்பிக்கை இருக்கக் கூடாது' என்று வள்ளலார் தனது நெறிமுறைகளைத் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, லிங்கப் பிரதிஷ்டை செய்வது வள்ளலாருக்கு எதிரானதாகும்!'' என பல்வேறு ஆதாரங்களை தனது தீர்ப்பில் நீதியரசர் சந்துரு குறிப்பிட்டுள்ளார். மேலும், ''வள்ளலார் மார்க்கம் விஞ்ஞான அடிப் படையில் ஆனது. புத்தருக்குப் பிறகு புதிய நன்மார்க்கத்தை அவர் உருவாக்கியவர். வள்ளலார் ஆறு திருமுறைகளை எழுதியிருக்கிறார். முதல் ஐந்து திருமுறைகளில் உருவ வழிபாட்டை ஏற்றுக்கொண்டாலும்... கடைசியாக ஆறாம் திருமுறையில், ஜோதி வழிபாட்டை மட்டுமே வலியுறுத்தி இருக்கிறார். இறுதிக் காலத்தில் சொன்னதையே அவரது உறுதியான வாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்!'' என்று சொன்ன நீதிபதி சந்துரு, ''சைவத்தின் மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டு இருந்தேன். ஆனால், முழு உண்மை என்ன என்பதை உணர்ந்த பிறகு அதை விட்டுவிட்டேன். நீங்களும் அதை விட்டுவிடுங்கள். அப்போதுதான் நீங்கள் ஆன்மிகரீதியாக முன்னேறலாம். வெற்று வார்த்தைகளாலும் சடங்குகளாலும் பயன் இல்லை. அன்பு, உண்மை, கருணை ஆகியவற்றால் மட்டுமே உயர்வை அடைய முடியும்!'' என்று வள்ளலார் சுட்டிக்காட்டியதையும் குறிப்பிட்டார். மேலும் அவர், ''சத்திய ஞான சபையில் உருவ வழிபாட்டை நடத்துவது வள்ளலாரை அவமதிப்பதாகும். வள்ளலாரை அவரது எதிரிகள் எதற்காக எதிர்த்தார்களோ, அந்தக் காரணத்தின் மூலமாகத்தான் அவரை முழுமையாக உணர முடியும். உருவ வழிபாட்டை எதிர்ப்பதையும், சாதி மத வேற்றுமைகளை நிராகரிப்பதையும் பார்த்துத்தான் வள்ளலாருக்கு எதிர்ப்பு கிளம்பியது. எனவே, உருவங்களை வடலூரில் வைத்து வழிபடக் கூடாது!'' என்று தீர்ப்பு அளித்துள்ளார். வள்ளலாரின் சமாதியில் மீண்டும் ஒரு வெற்றி மாலை! | |
|
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment