ஈதலின் சிறப்பு
3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
(பதவுரை) இயல் உடம்பு இது - பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது-நிலையுடையதென்று கருதியிராமல், கடுக - விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - விரும்புகின்ற, வீடு-முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.
அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண்டாகும், நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது.
பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் . (3)
No comments:
Post a Comment