நன்மையே செய்க
1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.
(பதவுரை) புண்ணியம் ஆம் - அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது அழிவினைச்செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க.
புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க.
No comments:
Post a Comment