Pages

Sunday, January 21, 2018

[vallalargroups:5876] தைப்பூசத்திற்கு தயாராகுவோம் என்ற தவ நெறியில், இன்று திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாடலின் பொருள் வருமாறு:


தைப்பூசத்திற்கு தயாராகுவோம் என்ற தவ நெறியில்,  இன்று திருப்பள்ளி எழுச்சியின் முதல் பாடலின் பொருள் வருமாறு:

இரவு முடிந்து பொழுது விடிந்தது.
என் உள்ளமாகிய மென்மையான செந்தாமரை மலர்ந்தது.
உலகத்திலும் என்னுள்ளும்  பொன்னொளி பரவியது.

என் மாட்சிமை பொருந்திய சற்குருவே, உன்னை தொழுது நிற்கின்றேன்,  உன் திருவருள் பெற்றிட எளியேன் அடுத்து என்ன பணி செய்ய வேண்டுமென ஆணை இடுங்கள்!

இந்த பிரபஞ்சத்தின் ஒரே முழுமைப் பொருள் இறைவன்தான் என வேத ஆகம மற்ற எல்லா இறை நூல்களும் கூறுகின்றன. இவற்றிற்கெல்லாம் முதன்மையானவன் நீ! எழுத்தால் எழுதிக்காட்ட முடியாத வல்லமையுள்ள  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனே! 
என் தந்தையே, என்னுள் நீ எழுந்தருள வேண்டும்.

இப்பாடலின் விளக்கம் வருமாறு:

நம்முள் அறியாமை என்னும் இருள் மண்டிக்கிடக்கிறது. இறைவன் பற்றிய சிந்தனை என்பது சூரியன் போன்ற ஒளி. அந்த இறை ஒளி சிந்தனை வருகிறபோது, அறியாமை எனும்  இருள் ஓடி விடுகிறது. இதைத்தான் பொழுது விடிந்தது என்கிறார்.

புறத்தே காலையில் சூரியன் வருகிறபோது இருளகன்று செந்தாமரை மலர்கிறது.அதுபோல, நம் உள்ளத்திலும் அறியாமை என்ற இருளகன்று இறைநினைவு என்ற ஒளி தோன்றிட, நம் உள்ளமாகிய தாமரை மலர்கிறது. 

இதனால் அகத்தும் புறத்தும் ஒளி பொங்கி வழிகிறது. இவ்வாறு மன இருள் அகன்று ஒளி அனுபவம் பெறுவதுதான் திருப்பள்ளி எழுச்சி பாடல்களின் ஒட்டுமொத்தக் கருத்து.

இறைவன் தூங்குகிறானா, அதாவது பள்ளி கொள்கிறானா? அவனை நாம் தட்டி எழுப்புகிறோமா, அதாவது பள்ளி எழுப்புகிறோமா? இறைவனுக்கு தூக்கமேது? தூங்குகிறவரைத்தானே எழுப்ப முடியும்? தூங்காத இறைவனை பள்ளி எழுப்புவதா? நம்முள் என்றும் எப்போதும் இறைவன் இருக்கிறான். நம்முள் அறியாமை எனும் இருள் மண்டிக்கிடப்பதால், இறைஉணர்வும் உறங்கிக் கிடக்கிறது. நம்முள் இறைவன் தூங்கவில்லை, இறைஉணர்வுதான் தூங்கிக் கிடக்கிறது. அதுதான் பள்ளி கொண்ட நிலை. இறையுணர்வைத்தான் பள்ளி எழுப்புகிறோம்.

 திருமூலர் நம் சிரசில்  "விளக்கினை ஏற்றி" என்பார். நம் புருவ மத்தியில் இறைவன் என்ற விள்கை புதியதாக ஏற்ற நம்மால் இயலுமா? மனித பிறப்பு எடுத்தபோதே நமக்கு நெற்றி என்கிற சிதாகாசம்-சிற்சபை-சிற்றம்பலம்- என்பதும் அங்கே இறையொளியும் அமைந்து விட்டனவே!  அஞ்ஞானத்தால்- அறியாமையால்- நாம் அவ்வொளியை காணாமலேயே- ஞானம் பெறுவதற்கே எடுத்த தேகம் என்று பெருமான் சொல்கிற இந்த உடலை அஜாக்கிரதையால் விட்டு விடுகிறோம். அப்படியெனில், திருமூலர் சொல்கிற விள்கினை ஏற்றி என்பதின் உட்பொருள் என்ன? என்றுமே நம்முள் உள்ள விளக்கை ஏற்றுதல் என்றால், புதியதாக தீப்பெட்டிக்கொண்டு ஏற்றுவதல்ல, ஏற்கெனவே மறைவாக நீறுபூத்த கனலாக மங்கலாக உள்ள ஒளியை- திரியை - தூண்டி அதாவது திரியை ஏற்றி விடுவதாகப் பொருள். இதைத்தான் திருப்பள்ளியெழுச்சியில்,  நம்முள் உறங்கிக் கிடக்கும் இறையுணர்வை தட்டி எழுப்புகிறோம். 

எனவே, இறைவன் தூங்குவதுமில்லை, அவனை நாமும்  எழுப்புவதுமில்லை. தூக்கத்திலிருந்து எழ வேண்டியவர்கள் நாம் தான். இதைக்குறிக்கவே பெருமான், "எனைப் பள்ளி எழுப்பிய அருட்பெருஞ்ஜோதி" என 7ம் பாடலில் அருளுவார்கள். அதை ஏழாம் நாள் காண்போம்.

... 

No comments:

Post a Comment