''தானத்தில் சிறந்தது அன்னதானம்!''
கல்வி, வீரம் மற்றும் காருண்யத்தில் சிறந்து விளங்கிய போஜராஜன் ஆண்டு வந்த காலம் அது...
ஏழை விவசாயி ஒருவர், தன் மகளை மணமுடித்து கொடுக்க பொருள் வசதி இல்லாததால், மன்னர் போஜராஜனிடம் பொருள் உதவி பெற நினைத்தார்.
அதனால், தன் மனைவியிடம் வழியில் சாப்பிடுவதற்கு ரொட்டி செய்து தருமாறு கேட்டார்.
அவர் மனைவியும், நிறைய ரொட்டிகளை செய்து கொடுக்க, அவற்றை பெற்று, புறப்பட்டார்.
வழியில் பசி ஏற்படவே, குளக்கரையில் அமர்ந்து, ரொட்டி பொட்டலத்தை பிரித்தார்.
அப்போது, குட்டிகளை ஈன்றிருந்த பெண் நாய் ஒன்று, வாலை ஆட்டியபடி, அவர் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தது.
அதைப் பார்த்த விவசாயி, 'ஐயோ பாவம்... ரொம்ப பசி போல...' என்று எண்ணி, ஒரு ரொட்டியை எடுத்து, நாயின் முன் போட்டார்.
அதை, 'லவக்'கென்று விழுங்கிய நாய், பசி அடங்காமல் மேலும் அவரைப் பார்க்க, இன்னொரு ரொட்டியை கொடுக்க, அதையும் விழுங்கியது நாய்.
இப்படியே, எல்லா ரொட்டிகளையும் நாய்க்கு போட்டவர், 'பாவம்... வாயில்லா ஜீவன்; சாப்பிட்டு, எவ்வளவு நாள் ஆயிற்றோ... நாம், இன்று ஒருநாள் சாப்பிடாவிட்டால், என்ன குறைந்துவிட போகிறது...' என்று எண்ணியபடி தன் பயணத்தை தொடர்ந்தார்.
அரண்மனையில் மன்னனை சந்தித்து, 'மன்னா... என் மகளின் திருமணத்திற்காக தங்களிடம் பொருள் உதவி பெற வந்துள்ளேன்...' என்றார் விவசாயி.
'குடியானவனே... நீ ஏதாவது புண்ணியம் செய்திருக்கிறாயா...? சொல்... அந்த புண்ணியத்தின் எடைக்கு எடை தங்கம் தருகிறேன்...' என்றார், போஜராஜன்.
சில வினாடிகள் யோசித்து, பின், 'மன்னா... நான் புண்ணியம் ஏதும் செய்ததாக நினைவில்லை; ஆனால், வரும் வழியில், ஒரு நாய்க்கு சிறிது ரொட்டி கொடுத்தேன், அவ்வளவு தான்...' என்றார்.
'சரி... அப்புண்ணியத்தை, இதோ இந்த தராசின் ஒரு தட்டில் வைத்ததாக கற்பனை செய்து கொள்...' என்று கூறி, தராசை காட்டினார் போஜராஜன்.
அவ்வாறே விவசாயி கற்பனை செய்ய, மறு தட்டில் பொற்காசுகளை போட்டனர், அரண்மனை பணியாளர்கள்.
தட்டு, அசையாமல் நிற்கவே, மேலும் போட, அப்போதும் தட்டு நகரவில்லை. கஜானாவே காலியாகியும், தராசு தட்டுகள் சிறிது கூட கீழிறங்கவில்லை.
அதிர்ந்து போன அரசர், கைகளை கூப்பி, 'ஐயா... தாங்கள் யார்?' என, பணிவாக கேட்டார்.
'மன்னா... நான் சாதாரண ஏழை விவசாயி; என் பட்டினியை பொறுத்து, பசியோடு இருந்த நாய்க்கு, சில ரொட்டிகளை போட்டேன்; வேறெதுவும் செய்யவில்லை...' என்றார்.
கண்கள் கசிய. 'ஐயா... தாங்கள் செய்தது அளக்க முடியாத புண்ணியம்; இதோ, அப்புண்ணியத்திற்கு ஈடாக என் ராஜ்ஜியத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றார், போஜராஜன்.
ராஜ்யத்தை மறுத்து, மகள் திருமணத்திற்கு தேவையான பொருளை மட்டும் பெற்று, நன்றி செலுத்தி சென்றார், விவசாயி.
பசி பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. அதனால், இயன்றவரை, தேவையானவர்களுக்கு அன்னதானம் செய்வோம்; இறையருள் பெறுவோம்!
'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார்...' என்றும், 'பசியால் பரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்...' என்றும் அன்னதானத்தின் சிறப்பை குறிப்பிடுவர், நம் முன்னோர்.
No comments:
Post a Comment