Pages

Friday, April 18, 2014

[vallalargroups:5369] ஜீவகாருண்யத்தின் முழுப் பரிமாணம்

ஜீவகாருண்யம் என்றவுடன், உலகில் உள்ள எல்லோரும் நினைவு கூறுவது வள்ளலாரைத்தான்.

அவர் " ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் " என்று கூறியுள்ளார்

ஜீவகாருண்யத்தின் முழுப் பரிமாணம் :

ஜீவகாருண்யம் என்றால் , தன் உயிரை பணயம் வைத்து, பிறருக்கு உபகாரம் - அன்னதானம் , கல்வி மற்றும் மருத்துவ உதவி போன்றவை செய்வதல்ல .

மனித இனத்துக்கு சேவை என்று கூறி. தன் நேரம் , உடம்பு, ஆரோக்கியம் , பணம் போன்றவை செலவழித்து விட்டு, இறுதியில், தன் உயிரை
எமனுக்கு பலி கொடுப்பது அல்ல ஜீவகாருண்யம்

இன்றைய சன்மார்க்க சங்கங்கள் அன்னதானம் , கல்வி மற்றும் மருத்துவ உதவி போன்ற அறப்பணிகளைச் செய்து வருகின்றன என்பதில் ஐயமில்லை. இவற்றையெல்லாம் செய்துவிட்டு, இது தான் ஜீவகாருண்யம் போலும் என்று எண்ணுகின்றார்கள்

இவற்றையெல்லாம் அரிமா சங்கங்கள் , ரோட்டரி சங்கங்கள் கூட செய்து வருகின்றன. பின் நமக்கும் , அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை நம் சங்கத்தவர்கள் யோசிக்க வேண்டும் - தெளிவு பெற வேண்டும்.

எவன் ஒருவன் தன் உயிரையும் உடம்பையும், சதா சர்வ காலமும் , பொன் போல் பாதுகாத்து , தக்க சாதனைகள் மூலம் அதனை மாற்றி , மண்ணுக்கும் , நெருப்புக்கும் இரையாக்காமல் , அதனை மேல் நிலைக்கு ஏற்றுவது தான் உண்மையான ஜீவகாருண்யம்


தன் உயிரை மீண்டும் வாரா வழிக்கு கூட்டிச் செல்வதே உண்மையான ஜீவகாருண்யம்


ஜீவகாருண்யம் என்றால் ஆன்மாவின் உருக்கம் என்று ஜீவகாருண்ய ஒழுக்கம் - மூன்றாம் பிரிவில் வள்ளலார் விளக்குகின்றார்.

ஜீவகாருண்யம் என்றால் ஆன்ம நெகிழ்ச்சி ஆகும். இந்நிலையிலே நமக்கு அன்பு வரும் , அந்த அன்பினால் நாம் சிவமாவோம் . அன்பு = சிவம்

ஜீவகாருண்யத்தின் முழுப் பரிமாணம் நம்மை ஆன்ம நிலைக்கு ஏற்றுவதாகும். ஜீவகாருண்யத்தில் இரக்கம், கருணை, ஒழுக்கம், தவம், பக்தி, தியானம், சத்விசாரம், தயவு எல்லாம் அடங்கி இருக்கின்றது. இது எப்படி என்றால் , கல்யாண விருந்தில், போடப்படும் அரிசிச் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயசம், வடை , தயிர், மோர், ஊறுகாய் போன்றது.

மேற்கூறியவைகளை எல்லாம் ஒருங்கிணைத்து யார் சாதனையாக தங்கள் வாழ்க்கையில் பயில்கிறார்களோ, அவர்களே சுத்த சன்மார்க்கத்தவர்கள்.

இதில் ஊறுகாயாக இருக்கும் அன்னதானம் மட்டும் செய்துவிட்டு , நாமும் ஜீவகாருண்யம் கடைப்பிடிக்கின்றோம் என்று கூறிக் கொள்வது பேதைமை.

வள்ளலார் ஓரிடத்தில் கருணைத் தான் நம் சாதனம் என்கின்றார் - பின்னர் மற்றொரிடத்தில், முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம் என்கின்றார்
அப்படியெனில் அவர் கூற்றுப்படி, சாதனம் = கருணை = முத்தி என்று ஆகின்றது.

அப்படியெனில் கருணைக்கு இரக்கம் என்று எப்படி பொருள் வரும் ?? இங்கு இரக்கம் என்ற பொருள் எடுபடாது



" கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக " எனக் கூறுகின்றார். கருணை = சிவம் எனில் , கருணை = ஆன்மா என்று தான் பொருள்படும். ஏனெனில் ஆன்மா என்பது அருட்பெருஞ்சோதியின் ஏகதேசம். ஆன்மாவும் பரமான்மாவும் ஒன்றாகும்.எனவே கருணை என்றால் ஆன்மா என்று தான் பொருள்படும்.

ஆன்மாவின் இயற்கை குணம் தயை. எனவே கருணை என்றால் ஆன்மா என்று தான் பொருள்படுமே அல்லாது இரக்கம் என்றும் , சோறு போடும் அன்னதானம் அல்ல.

ஜீவகாருண்யத்தின் முடிந்த முடிவு நம்மை ஆன்ம நிலைக்கு ஏற்றுவதே அன்றி வேறு இல்லை. அது 36 தத்துவங்களைக் கடந்த நிலை - ஏறா நிலை. அந்நிலையில் மாயத் தோற்றங்கள் , விகற்பங்கள் , பிரிவுகள் எல்லாம் அற்றுப் போய், " எல்லாம் ஒன்று " " ஒருமை " என்ற பெரிய நிலை வரும்.

மேலும் , அந்நிலையில் புறத் தோற்றங்கள் விலகி , " பொது நோக்கம் " விளங்கி - " எல்லாம் அணுக்களாய் - எல்லாம் நாத விந்துக்களாய் - எல்லாம் சிவமயமாய் - எல்லாம் இன்பமயமாய் " என்ற பெரிய நிலை வரும்.

இதனையே வள்ளலார் ஒரு கதையாக நமக்கு விளக்குகின்றார் - இருவர் நடந்து செல்கையில், ஒருவர் கால் பட்டு, ஒரு மண் கட்டி உடைந்து விட, அதை பொறுக்காமல் , அவர் மயங்கி விழுந்து விடுகின்றார். ஏனெனில், அவர் அதை மண் கட்டியாகப் பாராமல், அதனுள்ளிருந்த அணுக்கள் மயமாய் கண்டு, அது சிதறி விட்டனவே என்று தாங்காமல் , அவர் ஆன்மா உருகி, உடல் மயங்கி விழுந்ததாக கொள்ள வேண்டும்.

ஆன்மாவிற்கு இயற்கையாகவே தயை உள்ளபடியால், அதற்கு உருகும் தன்மை உண்டு. அந்நிலையில் கண்களில் சதா கண்ணீர் ஊற்றெடுக்கும் - உடம்பு நனையும். இதனை ஞான சரியை முதற் பாடல் நிரூபிக்கன்றது. ஞான சரியை என்பது ஆன்ம அனுபவத்தைக் குறிக்கன்ற பாடல்கள் ஆகும்.

ஆன்ம நிலை என்பது பொது நோக்கம் கொண்டது என்பதால் , " எத்தேவரையும் நின் சாயையாகவே பார்த்தேன் " என்று கூறுகின்றார்.

" எல்லாம் ஒன்று " " ஒருமை " என்பதெல்லாம் நாம் ஆன்ம நிலைக்கு வந்த பின் தான் கைகூடுமே அல்லாது , ஜீவ நிலையில் இருக்கும் வரையில் சாத்தியமே இல்லை என்பது உண்மை.

ஜீவகாருண்யமுள்ள சம்சாரிகளின் நிலத்தில் " தன் பிரயாசை இன்றியே பயிர்கள் தாமே விளையும் - எல்லாம் தானாகவே நடக்கும் - கை கூடும் " என்று கூறுவதின் உட்கருத்து : ஆன்ம நிலையைத்தான். ஆன்ம நிலையில் எல்லாம் தானாகவே நடக்கும் - இனிதே நடக்கும்.

ஜீவன் ஆன்மாவில் சங்கமம் ஆகி, ஜீவ இயக்கம் முடிந்து போய், ஆன்மா தன் ஆட்சியை நடத்த ஆரம்பிக்கும். அப்போது உடல் மற்றும் கருவி கரணங்கள் முழுமையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விடும். அந்நிலையில் , மாயை, கன்மம் ஆகிய மலங்கள் இலையாகையால், எல்லாம் தானாகவே நடக்கும் . இதெல்லாம் ஜீவகாருண்யத்தின் உச்ச கட்ட அனுபவங்கள் - ஜீவகாருண்யத்தின் பிரம்மாண்டம் ஆகும்.

ஆன்ம நிலையில் இருந்தால் இருந்த இடத்தே, உலக நடப்புகள் யாவும் ஒரு நொடிப் பொழுதில் காண்பிக்கும். இதைத் தான் வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் இருந்து கொண்டு, வடலூரில் சத்திய ஞான சபையின் கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்தார் என்பதும், அங்கிருந்தே சில பல திருத்தங்களை சொல்வார் என்றும் கூறுவர்.

சன்மார்க்க சாதனம் : இச்சாதனத்தை " ஓழிவில் ஓடுக்கம் " என்னும் மாபெரும் நூல் விவரிக்கின்றது. இந்நூலை ஒருவர் படித்துக்க் கொண்டிருக்க , அவ்வழியே நடந்து சென்ற வள்ளலார் , " நானோ நாணுகின்றேன் நீவீர் படிக்கின்றீறோ " என்று கேட்டதாக கூறுவர். இது செவி வழிச் செய்தி. அப்படியெனில் , இந்நூலைப் பற்றிய பெருமை மேலும் விவரிக்கத் தேவையில்லை.

வள்ளலாரே இந்நூலைப் பிரசுரித்தார் என்றால் , அதன் பெருமை எப்படி இருக்கும் என்றுப் பார்த்துக் கொள்ளவும்.

ஜீவகாருண்யத்தின் பிரம்மாண்டம் :

ஜீவகாருண்யத்தின் பலனாக நாம் ஆன்ம நிலையை அடைந்து விட்டால் , நம் அறிவு விசாலமாகி, அண்ட அண்டங்களைக் கடந்து விளங்கும். கண்ணில் மறைப்பாகிய மாயா மலம் நீங்கி விட்ட படியால் எல்லாம் பட்டப் பகல் போல் விளங்கியும், நம் அறிவு அண்டங்களைக் கடந்தும் விளங்கும்.

இதனைத் தான் வள்ளலார் முதலில் எனக்கு அற்ப அறிவு இருந்தது. இப்போது என்னறிவு அண்டண்டங்களுக்கு அப்பாலும் விளங்குகின்றது என்கின்றார்.

இதன் உட்பொருள் :
ஜீவ நிலையில் - அறிவு, அற்ப அறிவாக இருக்கும்
ஆன்ம நிலையில் - அண்டாண்டங்களைக் கடந்து விளங்கும். தான் ஜீவ நிலையிலிருந்து ஆன்ம நிலைக்கு ஏறி விட்டேன் என்று வள்ளல் உறுதிப் படுத்துகின்றார்.

இதனைப் புரிந்து கொள்ளாமல், வள்ளலார் தனக்கு அற்ப அறிவு இருந்தது என்று கூறியது - தன்னை தாழ்த்திக் கொள்ளவே என்றும், தற்சுதந்திரம் இன்மை என்றும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமை என்றும் எழுதுவது யாவும் பேதைமை

கண்ணில் மறைப்பாகிய மாயா மலம் விலகினால், தேகத்தின் விரிவையும், தேசத்தின் விரிவையும் கண்கள் காட்டும்.

இதைத் தான் , வள்ளலார் , " உலகமெல்லாம் " என்ற ஒரு வார்த்தைக்கு விளக்கமாக " மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் " எழுதி , அதில் தத்துவ உலகங்களை 80 - 90 பக்கங்களுக்கு அண்டங்களின் விரிவை எடுத்துக் கூறுகின்றார்

தேகத்தின் விரிவு : பிண்ட அனுபவ இலக்கணமாக உரை நடைப் பகுதியில் விவரிக்கின்றார்.
மேற்கூறியவைகள் யாவுமே ஆன்ம நிலையில் மட்டுமே சாத்தியம் - ஆன்ம அனுபவங்கள்.

ஆன்ம நிலையில் மாயா மலம் காரியப் படாது ஆகையால், ஸ்தூலக் கண்களுக்கு எல்லாம் பட்டப் பகல் போல் வெளிச்சம் ஆகிவிடுகின்றது

சுத்த சன்மார்க்கிகளுக்கு , மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை கூடாது என்று கூறுகின்றார். ஜீவ நிலையில் எல்லோருக்கும் இம்மூன்றும், வெவ்வேறு அளவுகளில் இருக்கும். அதுவே நாம் ஆன்ம நிலைக்கு முன்னேறி விட்டால், இம்மூன்றும் தானாகவே அற்றுப் போய்விடும் - ஏனெனில் ஆன்மா ஆசையற்றது .

இதன் மூலம் வள்ளலார் நம்மை மறைமுகமாக ஆன்ம நிலைக்கு ஏறி வாருங்கள் என்று அழைக்கின்றார்

ஆக ஜீவகாருண்யம் என்பது முத்தி ஆகிய ஆன்ம நிலையைக் கொடுப்பதும், சித்தி ஆகிய பல்வகை பேரின்பங்களையும், முத்தேக சித்தியைக் கொடுப்பதும் ஆகும்.

இதுவே ஜீவகாருண்யத்தின் பரிமாணமும் , பிரம்மாண்டமும் ஆகும்.

-
BG Venkatesh



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment