ஜீவகாருண்ய ஒழுக்கம் - கடவுள் வேதம் (அல்லது ) கடவுள் தம் கட்டளை
ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென் றறிய வேண்டும்.
கடவுள் தம் கட்டளைக்கு முழுதும் விரோதித்துப் பலவகையால் பந்தஞ் செய்யப்பட்டு நரகத்திலிருக்கின்ற பாவிகளுக்கும் தம் பரிவார தேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக் கின்றார்.
கடவுள் தம் கட்டளைப்படி நடவாத சாதாரண குற்றமுடைய சீவர்களைத் தமது சத்தியால் அவர்கள் பெறத்தக்க சுகங்களைப் பெறவொட்டாமல் தாம் கொடுத்த சௌக்கிய புவனபோகங்களை விடுவித்து, அந்தச் சீவர்களுக்கு நல்லறிவு வருவிக்கும் நிமித்தம் அந்தத் தேகத்தினின்றும் நீக்கி வேறொரு தேகத்தில் விடுகின்றார்.
ஊழ்வகையாலும் அஜாக்கிரதையாலும் அன்னிய சீவர்களுக்கு நேரிடுகிற அபாயங்களை நிவர்த்தி செய்விப்பதற்குத் தக்க சுதந்தரமும் அறிவு மிருந்தும் அவ்வாறு செய்யாமல் வஞ்சித்தவர்களுக்கு இவ்வுலக இன்பத்தோடு மோக்ஷ இன்பத்தை யனுபவிக்கின்ற சுதந்தரம் அருளாலடையப் படுவதில்லை யென்றும் தற்காலத்தில் அனுபவிக்கின்ற புவன போக சுதந்தரங்களையும் இழந்து விடுவரென்றும் கடவுள் வேதத்தில் விதித்திருக்கின்றபடியால்; ஊழ்வகையாலும் அஜாக்கிரதையாலும் பசி கொலையென்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க அறிவும் சுதந்தரமுமில்லாத சீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்கத்தக்க அறிவும் சுதந்திரமுள்ள சீவர்கள் வஞ்சியாமல் தயவினால் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு முக்கியமான லட்சியமென்றும், அதில் சத்தியமாக நம்பிக்கை வைத்துப் பசித்த சீவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்கியும், கொலைப்படும் சீவர்களுக்குச் செய்வகையால் கொலை நீக்கியும், திருப்தி இன்பத்தை உண்டுபண்ணுவதே மேலான பிரயோசன மென்றும் அறியவேண்டும்
முதற் சிருஷ்டி தொடங்கிக் கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகமாதலாலும், மனிதர்கள் மாத்திரம் பசியாற்றுவிக்கின்ற சீவகாருணிய விதியைப் பொதுவில் அவசியம் உறுதியாகப் பிடிக்கவேண்டுமென்றும் கடவுள் விதித்திருக்கின்ற படியால், பசியை ஆகாரத்தினால் நிவர்த்தி செய்விக்கின்ற சீவகாருணிய ஒழுக்கம் மனிதர்களிடத்தே பெரும்பான்மை நடத்த வேண்டுமென்று அறிய வேண்டும்.
மனிதர்கள் பிராரத்தப்படி நியதி ஆகாரத்தைப் புசித்துப் பிராரத்த அனுபவத்தை நீக்கிக் கொண்டு, ஆகாமியத்தால் முயற்சி ஆகாரத்தைப் புசித்துக் கரணேந்திரிய தேகத்தை வலுவுள்ளதாகச் செய்து கொண்டு, சன்மார்க்க சாதனத்தை அனுசரித்துச் சித்தி முத்தி இன்பங்களைப் பெறக்கடவரென்று கடவுள் விதித்திருக்கின்றபடியால், மனிதர்களுக்குப் பிராரத்த ஆகாரமும் ஆகாமிய முயற்சி ஆகாரமும் அவசியம் வேண்டுமென்று அறியவேண்டும். மிருகம் பட்சி ஊர்வன தாவரம் என்கிற சீவதேகங்கள் தண்டனை நிமித்தம் விதித்த தேகங்களாதலால், பிராரத்த ஆகாரம் கடவுள் விதித்த வண்ணம் அருட்சத்தியால் தடைபடாமல் கொடுக்கப் படுமாகலில், ஆகாமிய ஆகாரம் சம்பாதிக்க வேண்டாமென் றறிய வேண்டும்.
ஒரு சீவனைக் கொன்று ஒரு சீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல் சீவகாருணிய ஒழுக்கமே யல்லவென்றும், கடவுள் சம்மதமும் அல்லவென்றும், இவைகட்கு முழு விரோதமென்றும் அறியவேண்டும்.
நிலத்திற் கலந்த வித்திற்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன வென்று அறிய வேண்டும்.
- பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், சாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் போதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே
முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் விட்டுக் கடின அறிவுள்ளவர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால் கடவுள் விதித்த அருளாக்கினைப்படி பசி கொலை பிணி முதலியவற்றால் மிகவுந் துன்பப்படுகின்றார்களென் றறியவேண்டும்.
கடவுள் அருளாக்கினைக்குச் சீவர்களிடத்தில் சீவர்கள் தயவு வைத்து உபசரிப்பதே சம்மதமென்று உண்மையறிந்து சொல்லுவதே உத்தரமென்று அறியவேண்டும்.
Thanks,
Anandhan L.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment