திருவருள் பெருங்கருணை ( திறம் / தன்மை ): |
ஆறறிவு உள்ள இம்மனிதப் பிறப்புடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) எங்ஙனம் அறிவேன்! எங்ஙனம் கருதுவேன்! என்னென்று சொல்வேன்! |
என்னுருவைச் சிதைப்பதற்கு எதிரிட்ட துரிசுகள் எல்லாவற்றையும் நிக்கிரகம் செய்து அருளுனீர். இங்ஙனம் புரிந்த தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) எங்ஙகனம் அறிவேன்! எங்ஙனம் கருதுவேன்! என்னென்று சொல்வேன்! |
சோணிதக் காற்றின் அடிபடல்,யோனி நெருக்குண்ணல் முதலிய அவத்தைகளால் அபாயம் நேரிட ஒட்டாமல் காத்து இவ்வுலகினிடத்தே தோற்றுவித்து அருளினீர்.இங்ஙனம் புரிந்த தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) எங்ஙனம் அறிவேன்! எங்ஙனம் கருதுவேன்! என்னென்று துதிப்பேன்! |
தந்தை என்பவனது சுக்கிலப் பையின், எவ்வகைத் தடைகளும் வாராதபடி, பகுதிப் பேரணு உருவில் கிடந்த எனது அகத்தினும்,புறத்தினும்,அருவாகியும்,உருவாகியும் சலித்தல் முதலிய இன்றி அன்பொடும்,அருளொடும் பாதுகாத்திருந்த தேவரீரது திருவருள் பெருங்கருணையை (தன்மையை) என்னென்று கருதுவேன்! என்னென்று துதிப்பேன்! |
தாய் என்பவளது சோணிதப் பையின்கண், எவ்வகைத் தடைகளும் வாராதபடி, பூதப் பேரணு உருவிலும் கிடந்த எனது அகத்தினும்,புறத்தினும், அருவாகியும், உருவாகியும் சலித்தல் முதலிய இன்றி பெருந்தயவினோடு பாதுகாத்திருந்த தேவரீரது திருவருள் பெருங்கருணையை(தன்மையை) என்னென்று கருதுவேன்! எங்ஙனம் துதிப்பேன்! |
எனது அகத்தினும்,புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளகத்திருந்து, உயிரில் கலந்து பெருந்தயவால் திருநடம் செய்தருளுகின்றீர். இங்ஙனம் செய்து அருளுகின்ற, தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்! |
திருவருள் பேராற்றல்: |
யாவராலும் பிரித்தற்கு ஒருவாற்றானும் கூடாத பாசம் என்னும் மகாந்த காரத்தினின்றும், ஓர் கணப்பொழுதினுள் அதிக்காரணக் கிரியையால் அதிக்காரணப்பகுதி உருவில் பிரித்தெடுத்தருளிய தேவரீரது திருவருள் பேராற்றலை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்! |
. காரணக் கிரியையால் காரணப் பகுதி உருவினும், அதிசூக்குமக் கிரியையால் அதிசூக்குமக் பகுதி உருவினும், சூக்குமக் கிரியையால் சூக்குமக் பகுதி உருவினும், பரத்துவ சத்திசத்தரால் பூத உருவினும், அபரத்துவ சத்திசத்தரால் பவுதிக வடிவிலும், ஓர் கணப்போதினுள் என்னைச் செலுத்தாமல் செலுத்திய தேவரீரது திருவருள் பேராற்றலை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்! |
பற்பல புறஉறுப்புக்களும், புறப்புற உறுப்புக்களும் எனக்கு உபகரிக்கும் பொருட்டு இப்பொதிக வடிவின்கண்ஒருங்கே உண்ணின்று தோன்ற, உண்ணின்று தோற்றாது தோற்றுவித்த தேவரீரது , திருவருள் பேராற்றலை எங்ஙனம் அறிந்து, எவ்வாறு கருதி , என்னென்று துதிப்பேன்! |
பேரருள் பெருங்கருணைத் திறம்: |
உறுப்பில் குறைவுப்படாத உயர் பிறப்பாகிய, இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்து அருளிய,தேவரீரது பேரருள் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்! |
எவ்வகை தடைகளாலும் தடைப்படாமல், எனது அகத்தும்,புறத்தும் காத்திருந்து வளர்த்தருளிய, தேவரீரது பேரருள் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்! |
நற்செய்கைகளில் என்னைச் செலுத்திய,தேவரீரது பேரருள் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்! |
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment