திருவருள் பெருங்கருணை ( திறம் / தன்மை ):1. ஆறறிவு உள்ள இம்மனிதப் பிறப்புடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) எங்ஙனம் அறிவேன்! எங்ஙனம் கருதுவேன்! என்னென்று சொல்வேன்!2. என்னுருவைச் சிதைப்பதற்கு எதிரிட்ட துரிசுகள் எல்லாவற்றையும் நிக்கிரகம் செய்து அருளுனீர். இங்ஙனம் புரிந்த தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) எங்ஙனம் அறிவேன்! எங்ஙனம் கருதுவேன்! என்னென்று சொல்வேன்!3. சோணிதக் காற்றின் அடிபடல்,யோனி நெருக்குண்ணல் முதலிய அவத்தைகளால் அபாயம் நேரிட ஒட்டாமல் காத்து இவ்வுலகினிடத்தே தோற்றுவித்து அருளினீர்.இங்ஙனம் புரிந்த தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) எங்ஙனம் அறிவேன்! எங்ஙனம் கருதுவேன்! என்னென்று துதிப்பேன்!4. தந்தை என்பவனது சுக்கிலப் பையின், எவ்வகைத் தடைகளும் வாராதபடி, பகுதிப் பேரணு உருவில் கிடந்த எனது அகத்தினும்,புறத்தினும்,அருவாகியும்,உருவாகியும் சலித்தல் முதலிய இன்றி அன்பொடும்,அருளொடும் பாதுகாத்திருந்த தேவரீரது திருவருள் பெருங்கருணையை (தன்மையை) என்னென்று கருதுவேன்! என்னென்று துதிப்பேன்!5. தாய் என்பவளது சோணிதப் பையின்கண், எவ்வகைத் தடைகளும் வாராதபடி, பூதப் பேரணு உருவிலும் கிடந்த எனது அகத்தினும்,புறத்தினும், அருவாகியும், உருவாகியும் சலித்தல் முதலிய இன்றி பெருந்தயவினோடு பாதுகாத்திருந்த தேவரீரது திருவருள் பெருங்கருணையை(தன்மையை) என்னென்று கருதுவேன்! எங்ஙனம் துதிப்பேன்!6. எனது அகத்தினும்,புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளகத்திருந்து, உயிரில் கலந்து பெருந்தயவால் திருநடம் செய்தருளுகின்றீர். இங்ஙனம் செய்து அருளுகின்ற, தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment