பசித்திரு, தனித்திரு, விழித்திரு.
என்ற முப்பெரும் அனுபவ மகா வாக்கியங்களால், நம் சுத்த சன்மார்க்கம் வழங்கியுள்ளது. இவற்றின் உண்மை அனுபவம். சுத்த சன்மார்க்கிகளுக்குத்தான் அருளப்பட்டுள்ளது. நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்ற மெய்ஞ் ஞானிகள், எல்லா உண்மைகளையும் அறிவர். தம் அகத்தின்கண் மிளிரும் அருட்பெருஞ் ஜோதி பதியை இடைவிடாது புருவ மத்தியினின்று சிந்திருப்பர். அதாவது, அவர்களின் நெற்றிக்கண், இமையாது விழித்திருந்து, தெய்வ ஜோதியைப் பார்ப்பறப் பார்த்து நிற்கும். அவர்களை, அப்போது மாயா சக்திகள் ஒன்றும் தாக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் அழிவற்ற அருளொளியில் நிலைத்திருக்கின்றனர். ஆகையால் இவர்கள் எங்கிருப்பினும் எதனாலும் பற்றப்படாது தனித்தே இருப்பவராவர். அன்றியும், அவர்களுடைய தேகத்திற்கும் அருட்பெருஞ் ஜோதியே ஆதாரமாயிருத்தலால், அத்தேகம் பிரபஞ்ச வஸ்துக்களின் ஆதாரமின்றி நிலைக்கும். ஆகையால், அவர்கள் தேகத்திற்கு உணவு தேவையில்லை. அவர்கள் எப்பொழுதும் ஆகாரம் கொள்ளாது, நிராகாரமாய் நிலைத்திருப்பார்கள்.
ஆகவே சுத்த சன்மார்க்கிகள் மட்டும்
பசித்திருப்பார்கள்
தனித்திருப்பார்கள்
விழித்திருப்பார்கள்.
நாமும், தயையும், ஒருமையும் உடையவர்களாகி, நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொண்டு, சுத்த சன்மார்க்கத்தில் நின்று பழகிவரும்போது, அகத்தொளிர் அருட்பெருஞ் ஜோதி அனுபவப்படப்பட, ஆகாரமும். நித்திரையும், புறச் சார்புகளும் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டுவந்து, முடிவில் அவற்றை முழுதும், ஒழித்து, எப்பொழுதும்
பசித்திருக்கவும்,
தனித்திருக்கவும்,
விழித்திருக்கவும்
கூடும்.
இப்படி ஆகாரத்தையும். நித்திரையையும் புறச் சார்புகளையும் ஒழிக்க முயலுமுன், பிரபஞ்ச போகத்தினிடத்து, நிராசையையும், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சக்தியில், பூரண நம்பிக்கையும், பற்றும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்படுத்திக் கொண்டிருந்தால் தான் நமக்கு பசி உணர்ச்சி ஏற்படுமாயின் உடனே அருட் சக்தியே அதை மாற்றிவிடும். பசியொழிய தத்துவங்களெல்லாம் நம் வசப்பட்டுவிட நாம் தனித்திருக்கவும், அப்படியிருந்து, அருட்பெருஞ் ஜோதியே எப்போதும் தரிசித்திருக்கவும் கூடும். ஆகையினால், நம் அருட்பெருஞ் ஜோதி சக்தியை முழு நம்பிக்கையோடு பற்றிக் கொண்டுதான்.
பசித்திருத்தல் வேண்டும்.
தனித்திருத்தல் வேண்டும்.
விழித்திருத்தல் வேண்டும்.
இப்படி இருந்தால் நமது தனிப்பெருங்கருணைத் தலைவர் நம்மில் வெளிப்பட்டு, பூரண திருவருட் சக்தியை வழங்கி, சுத்த தேகச் சுக வாழ்வைத் தந்து, உலவாப் பேரின்பத்தில் விளங்கச் செய்வார்.
அப்படியல்லாது, தயவும் ஓர்மையும் கொண்டு, நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெறாமற் போனால் கடவுளுடைய திருவருள் விளக்கம் பெற முடியாது. அத் திருவருள் விளக்கத்தை உண்மையாகக் கண்டு கொள்ளாவிட்டால், அவர் திருவருட் சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியாது. அவருடைய திருவருட் சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியாது போனால், நம்முடைய பசியை உண்மையாக, நித்தியமாக ஒழிக்க முடியாது. அப்போது அநித்தியப் பிரபஞ்சப் பொருள்களின் உதவியை நாட வேண்டிவரும். அதனால் நம் தேகத்திற்கு தீங்கு நேரும்.
அன்றியும், நமக்குண்டாகும் பசியையும், நித்திரையையும், பிற சாதனையாலும், தந்திரங்களாலும் தவிர்த்துக் கொண்டு நிராகாரத்தோடு விழித்திருப்போமானால், நம்மைச் சூழ்ந்துள்ள மாயா சக்தியினால் நமது தேகம் பாழ்படுத்தப்படும். அன்றியும், நிராதாரத்தோடு, கான்களிலும், மலை முழைகளிலும் தனித்திருந்தும், விழித்திருந்தும், தவஞ்செய்யும் பெரியவர்களும், அருட்பெருங் கடவுட் சக்தியைப் பெற்றுக் கொள்ளாததினால்தான், யோக சக்தியால் பல நூறு ஆண்டுகள் இருந்தாலும், கடைசியில், தங்களது தேகத்தை விட்டுவிடுகின்றார்கள். ஆகையினால், நாட்டைத் துறந்து காட்டிற் சென்று, கந்த மூலங்களையும், பண்டு பலாதிகளையும் உண்டு, தனித்திருந்து, தவஞ்செய்து கடவுளைக் கண்டு கொள்ளலாமென்பது உண்மையல்ல. அப்படிச் செய்வது, திருவருட் சம்மதமன்று.
நமது தனிப்பெருங்கருணைக் கடவுள் நம்மீது வைத்த பெருந்தயவு காரணமாய், நமக்கு இவ்வுயர்வுடைய மனிதப் பிறப்பைத் தந்து, இதிலிருந்து ஒருமையால் அவரை அறிந்தும், தயவால் அருளடைந்தும், அவருடைய பூரணத் தன்மையையும் பெற்றுக் கொள்ளும்படி விதித்துள்ளார். இதனால் இம் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்ட நாம், மாயா பிரபஞ்ச அநித்திய சுக போகங்களில் பற்று வைக்காது, திருவருளை அடைந்து, நித்திய வாழ்வு பெற வேண்டும். ஆனால், இந்த மாயா பிரபஞ்சத்தை முற்றிலும் வெறுத்துத் தள்ளிவிடக்கூடாது. அப்படி வெறுத்து, துறவு கொண்டால், இந்த மாயா தேகத்திலும், பிரபஞ்சப் பொருள்களிமும் வெறுப்புண்டாகிவிடும். இத் தேகத்திலும், பொருளிலும், வெறுப்புண்டாகி விட்டால், இவை கொண்டு பரோபகாரஞ் செய்து பெற்றுக் கொள்ள வேண்டிய தயா உணர்ச்சியும், அருளுணர்ச்சியும் பெற்றுக் கொள்ளக் கூடாது போகும். ஆகையால் இவைகளைத் துறத்தல் கூடாது.
அன்றியும், நம்மை இம் மாயா தேகத்தில் வருவித்து, மாயா பூத பெளதிகப் பொருள்களால் வளரும்படி செய்துள்ள நமது ஆண்டவருடைய திருவுள்ளத்தை உண்மையாக அறிந்து கொண்டால், இத் தேகத்தையும், பொருள்களையும் வெறுக்கத்தான் நம் மனம் துணியுமா ? வெறுத்துத் தள்ளி, இத் தேகத்தை அலட்சியம் செய்து மண்ணாக்கிக் கொள்ளத்தான் நாம் இசைவோமா ?
நம் பதி நம்மை, இத் தேகத்தில் வருவித்து மாயா பிரபஞ்ச பொருள்களால் வளர்த்து, இத் தேகத்தின் உள்ளீடாய் மறைந்திருக்கும் அருட்பெருஞ் ஜோதி நித்தியப் பரம்பொருட் சக்தியைக் கண்டு கொண்டு அதன் துணையால் இத் தேகத்தையே அருட்பெருஞ் ஜோதி பொன்னென்ன நித்திய தேகமாக்கிக் கொள்ளும்படி திருவுளங் கொண்டுள்ளார். ஆகையினால், இந்த தேகத்தை அலட்சியம் செய்யப்படாது. அருட்பெருஞ் ஜோதியைப் பெறுமட்டும், இத் தேகம் நிலைத்திருக்க வேண்டும். ஆதலால் பிரபஞ்சப் பொருள்களில், விருப்பும், வெறுப்புமில்லாது அவை, நம் கைக்கு வர வர, தயையோடு பிறர் பசிக்கும், பிற அவத்தைகட்குமாய் பரோபகரித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்படி செய்து கொண்டிருந்தால், தயாவொழுக்கமும், திருவருள் விளக்கமும் அடைந்து, நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளக் கூடும். ஆகவே, இத் தேகத்தை திருவருள் அடையும் வரை, அதி ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு நமக்கு எந்த மட்டும் பிரபஞ்சப் பொருள்கள் வழங்கப் படுகின்றனவோ, அந்த மட்டும், இத் தேகத்தை வைத்துத் திருவருள் பெறுவதற்கு, நேர்ந்த ஜீவர்களுக்கு, தயையோடு பரோபரித்துக் கொண்டு இருத்தல் வேண்டும். இதுவே திருவருட் சம்மதமென்று உண்மையாக அறிய வேண்டும். ஆகையால், மனித தேகத்தைப் பெற்றுள்ள என் உரிமைச் சகோதரர்களே, இத் தேகத்தை வெறுக்க வேண்டாம். பிரபஞ்சத்தைத் துறக்க வேண்டாம். இதற்குப் பிரமாணம் ;
"ஓடாது மாயையை நாடாது நன்னெறி
ஊடா திருவென்றீர் – வாரீர்
வாடா திருவென்றீர் வாரீர்"
என்ற திருவருட் பிரகாச வள்ளற் பாவால் தெளியப்படும். துறவு கொண்டு வீட்டை விட்டு ஓட வேண்டாம். ஆனால் மாயையில் விசேஷ பற்று வேண்டாம். நன் முயற்சியோடு, வாட்டமற்றிருந்து, இப் பிறவிப் பெரும் பயனைப் பெற்று, பேரின்ப சித்திப் பெருவாழ்வில் அருட்பெருஞ் ஜோதி மயமாய்த் திகழ்வோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சுத்த சன்மார்க்க அன்பன்
பாலமுருகன்
காஞ்சிபுரம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
Post a Comment